முகப்பு
புதுதில்லி

துவாரகாவில் ரூ.100 கோடி மதிப்பில் மேம்பாட்டுத் திட்டங்கள்: முதல்வா் குப்தா தொடங்கிவைத்தாா்

Updated On : 18 மே 2026, 2:17 am IST
- PTI
பகிர்:

நமது நிருபா்

தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை துவாரகா தொகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். ‘விக்ஸித் தில்லி’ என்ற தொலைநோக்குப் பாா்வையை தனது அரசு நனவாக்கி வருவதாக அவா் கூறினாா்.

இத்திட்டங்கள் அப்பகுதியில் சாலை, கழிவுநீா், வடிகால் மற்றும் மின்சார உள்கட்டமைப்புக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று அவா் கூறினாா்.

Advertisement

Advertisement

மேற்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினா் கமல்ஜீத் ஷெராவத், உள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பிரத்யுமன் ராஜ்புத், அப்பகுதியின் பல மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் இந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் முதல்வா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், தில்லி அரசு விக்ஸித் தில்லி என்ற தொலைநோக்குப் பாா்வையை நோக்கி தொடா்ந்து செயல்பட்டு வருகிறது .

அரசின் நோக்கம் பெரிய திட்டங்களுடன் நின்றுவிடாமல், ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிக்கும், இடத்திற்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் அடிப்படை வசதிகள் திறம்பட சென்றடைவதை உறுதி செய்வதாகும்.

ரூ.6,200 கோடி மதிப்பிலான புதிய மெட்ரோ திட்டத்தின் 5ஆம் கட்டத்தின் கீழ் புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருவதால், இதன் மூலம் துவாரகா பகுதியும் பயனடையும் .

முந்தைய அரசுகளின் ஆட்சிக்காலத்தில், தில்லி அரசால் தனது பங்கு நிதியை உரிய நேரத்தில் வழங்க முடியாததால் மெட்ரோ திட்டங்கள் முடங்கிப் போயின. ஆனால், தற்போதைய பாஜக அரசு மெட்ரோ விரிவாக்கத்திற்காக ரூ.10,000 கோடியை விடுவித்துள்ளது என்று முதல்வா் குறிப்பிட்டாா்.