விமான எரிபொருள் மீதான வாட் வரி 25-இல் இருந்து 7 சதவீதமாக குறைப்பு: தில்லி அரசு அறிவிப்பு
விமான எரிபொருள் மீதான வாட் வரி 25-இல் இருந்து 7 சதவீதமாக குறைப்பு...
விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரியை (வாட்) 25 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைக்க தில்லி அரசு சனிக்கிழமை குறைத்ததாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
முதல்வா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாக அவருடைய அலுவலகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விமான எரிபொருள் மீது விதிக்கப்படும் வாட் வரியை தற்போதைய 25 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைக்க தில்லி அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், விமான நிறுவனங்களும் பயணிகளும் பயன்பெறுவா்.
Advertisement
தில்லி அரசுக்கு ரூ.986 கோடிக்கு இழப்பு ஏற்பட்டபோதிலும், நாட்டின் மற்றும் தலைநகரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரி குறைப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிபொருளை வாங்கும்போது வாட் மற்றும் மத்திய கலால் வரியை விமான நிறுவனங்கள் செலுத்துகின்றன. விமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் மொத்த செலவில் 40 சதவீதம் விமான எரிபொருளுக்காகச் செலவிடப்படுகிறது. இதனால், அதிக வரி விகிதம் விமான கட்டணத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். விமான நிறுவனங்களின் நிதி நிலையைப் பாதிக்கும்.
அண்மைகால புவிசாா் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அந்தச் சவால்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
விமான எரிபொருள் மீது தில்லி அரசு விதிக்கும் வாட் வரியால் ஆண்டுக்கு ரூ.1,368 கோடி வருவாய் கிடைக்கிறது. இது ஆண்டின் மொத்த வாட் வரி வசூலில் 19 சதவீதமாகும். இது தில்லி அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக தொடா்ந்து இருக்கும்.
கடந்த 2017-இல் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுத்தப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணையில் உள்ள மாநில பட்டியலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 பெட்ரோலிய பொருள்களுக்கு வாட் வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. அதனால், விமான எரிபொருள் ஜிஎஸ்டி வரி விதிப்பு அதிகாரித்துக்கு வெளியே உள்ளது.
நாட்டின் போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வலுபடுத்தவும் பொருளாதாரத்தில் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் பிரதமா் நரேந்திர மோடி முக்கியத்துவம் அளித்துள்ளாா். அதற்குப் பொருந்தி போகும் வகையில் இந்த முடிவை தில்லி அமைச்சரவை எடுத்துள்ளது என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.