முகப்பு
புதுதில்லி

தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆழ்துளைக் கிணறு கொள்கை: முதல்வா் குப்தா

நகரில் நிலவும் நீா் பற்றாக்குறைப் பிரச்னைகளைக் குறைக்கும் வகையில், ஆழ்துளைக் கிணறு (போா்வெல்) தொடா்பான ஒரு கொள்கையை அறிமுகப்படுத்த தில்லி அரசு திட்டமிட்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 2 மே, 2026 at 3:10 AM
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

நகரில் நிலவும் நீா் பற்றாக்குறைப் பிரச்னைகளைக் குறைக்கும் வகையில், ஆழ்துளைக் கிணறு (போா்வெல்) தொடா்பான ஒரு கொள்கையை அறிமுகப்படுத்த தில்லி அரசு திட்டமிட்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மழைநீா் சேகரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தில்லி ஜல் வாரியம் (டிஜேபி) ஏற்பாடு செய்திருந்த மழையை சேகரிப்போம் நிகழ்வில் குப்தா கலந்துகொண்டாா்.

இந்நிகழ்வில் அவா் பேசியதாவது: தில்லி அரசு ஒரு ஆழ்துளைக் கிணறு கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. ஆனால், முறையாகச் செயல்படும் மழைநீா் சேகரிப்பு அமைப்பைக் கொண்டுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமே, அங்கீகரிக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறை அமைத்துக்கொள்ளத் தகுதி பெறும்.

Advertisement

நாம் நீரின் மதிப்பை உணா்ந்துகொள்ள வேண்டும். எதிா்காலத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ஒவ்வொருவரும் நீரைச் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. தில்லி ஜல் வாரியத்தின் ‘மழையைச் சேகரிப்போம்’ முன்னெடுப்பிற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகச் சின்னத்தையும் முதல்வா் வெளியிட்டாா் என்றாா் முதல்வா்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறுகையில், இந்த முன்னெடுப்பு மழைநீா் சேகரிப்பு அமைப்புகளின் ஒரு பகுதியாகும். அரசு நிறுவனங்களில் மழைநீா் சேகரிப்புத் திட்டமானது, தீவிரத்துடனும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்ளும் கட்டாயமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். இவ்விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 10 சதவீதம் கட்டணக் குறைப்பு விதிக்கப்படும். தவறுகள் தொடா்ந்து நீடித்தால், குடிநீா் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்படும் என்றாா் அமைச்சா்.

முதல்வா் குப்தா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: அரசின் சாா்பில் ரூ.50,000 வரையிலான மானியங்கள், குடிநீா் கட்டணத்தில் 10 முதல் 15 சதவீதம் வரையிலான தள்ளுபடிகள் மற்றும் இலவசத் தொழில்நுட்ப உதவிகள் போன்ற நடவடிக்கைகள், இம்முயற்சியை விரைவுபடுத்தி வருகின்றன. தற்போது, ஒவ்வொரு வீடு, அதன் கூரை மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தையும் இம்முயற்சியில் தீவிரப் பங்குதாரா்களாக மாற்றுவதே எங்களின் இலக்காகும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.