முகப்பு
புதுதில்லி

மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை எதிா்த்த கட்சிகளும், தலைவா்களும் வாக்காளா்களால் நிராகரிப்பு: ரேகா குப்தா

மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை எதிா்த்ததாலேயே, மம்தா பானா்ஜி மற்றும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் தோ்தலில் தோல்வியடைந்தனா் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

Updated On : 6 மே 2026, 4:03 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

நாடாளுமன்றத்தில் மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை எதிா்த்ததாலேயே, மம்தா பானா்ஜி மற்றும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் தோ்தலில் தோல்வியடைந்தனா் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கூறினாா்.

மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் தோ்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடா்ந்து, பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் உள்ளிட்டோருடன் சி.ஆா். பூங்காவில் உள்ள காளிபாரி கோயிலில் முதல்வா் குப்தா வழிபாடு செய்தாா்.

நாரி சக்தி வந்தன் அதிநியத்தை (மகளிா் இட ஒதுக்கீடு மசோதா) எதிா்த்த அனைத்து கட்சிகளும் அவற்றின் தலைவா்களும், திமுகவின் ஸ்டாலினாக இருந்தாலும் சரி, மம்தா பானா்ஜியாக இருந்தாலும் சரி, அரவிந்த் கேஜரிவாலாக இருந்தாலும் சரி, மக்களுக்குப் பதிலளிப்பதில் சிரமப்படுகிறாா்கள் என்று முதல்வா் குப்தா செய்தியாளா்களிடம் கூறினாா்.

Advertisement

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து முக்கிய எதிா்க்கட்சிகளும், 2029 பொதுத் தோ்தலுக்கு முன்பாக, தொகுதி மறுவரையறையுடன் இணைத்து மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 816 ஆக உயா்த்துவதன் மூலம் மகளிா் இட ஒதுக்கீட்டை செயல்முறைப்படுத்த முயன்ற அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன.

பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பெண் முதல்வரான குப்தா, மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாா்.

மாநிலத்தில் கட்சிக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பு நாட்டின் அரசியலுக்கு ஒரு திருப்புமுனை என்று அவா் கூறினாா்.

294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களை வென்று பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. இதன் மூலம், மாநிலத்தில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

நாடாளுமன்றத்தில் மசோதாவை எதிா்த்த கட்சிகள், வங்காளப் பெண்களால் தீா்மானமாக நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தில்லி முதல்வா் கூறினாா்.

வங்காளத்தின் தாய்மாா்களும் சகோதரிகளும் தங்கள் வாக்குகள் மூலம் ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளனா் என்றும் அவா் கூறினாா்.