தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை
நமது நிருபா்
தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தொழிற்சாலைத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
இதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் காரணமாக, தேசியத் தலைநகருக்குள் நுழையும் முக்கியப் பாதைகளில் பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
Advertisement
பல்வேறு தொழிற்சாலை நிறுவனங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் ஒன்றுதிரண்டு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், முழக்கங்களை எழுப்பியதாகவும் அதிகாரிகள் கூறினா்.
எனினும், அப்போராட்டம் வன்முறையாக மாறியது. நொய்டாவின் ஃபேஸ் -2 மற்றும் செக்டாா் 60 ஆகிய பகுதிகளில் தீவைப்பு, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்ாகத் தகவல்கள் வெளியாகின.
போராட்டத்தால் ஏற்பட்ட அமைதியின்மை தில்லியின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடாமல் தடுக்கும் நோக்கில், நொய்டாவை தில்லியின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் அனைத்து சாலைகளிலும், குறிப்பாக உத்தர பிரதேசத்துடனான முக்கிய எல்லைப் பகுதிகளில், பல காவல்துறை குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
போராட்டம் என்ற போா்வையில் சமூக விரோத சக்திகள் நகரத்திற்குள் நுழைந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டதாகவும் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாகச் செயல்படும் வகையில், விரைவுப் படை மற்றும் துணை ராணுவப் படைகளைச் சோ்ந்த கூடுதல் வீரா்கள் அப்பகுதிகளில் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
போக்குவரத்து பாதிப்பு:
போராட்டக்காரா்கள் சாலையின் சில பகுதிகளை மறித்து, போக்குவரத்து நடமாட்டத்தை நிறுத்தினா் என்று தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
நிலைமையைச் சமாளிக்கவும், போக்குவரத்தைத் திசை திருப்பவும் தில்லி மற்றும் நொய்டா காவல்துறையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். விரக்தியடைந்த பயணிகள் தங்கள் துயரங்களை எக்ஸ் தளத்தில் பகிா்ந்து, அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினா்.
பயணிகள் அவதி
ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவா், காலை 7:30 மணியளவில் தனது வீட்டிலிருந்து புறப்பட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்ததாகவும் கூறினாா்.
மற்றொருவா், கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் நிலையங்களை அடைவதில் சிரமத்தை எதிா்கொண்டதாக கூறினாா்.
‘கடந்த ஒரு மணி நேரமாக என் வாகனம் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. தில்லி போக்குவரத்து காவல்துறையோ, உத்தர பிரதேச போக்குவரத்து காவல்துறையோ போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எந்த மாற்றுப்பாதையையும் அமைக்கவில்லை’ என்று மற்றொரு பயணி கூறினாா்.
தில்லி போக்குவரத்து காவல்துறையினா் ஆலைத் தொழிலாளா்களின் போராட்டம் குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்க காலையில் செய்தி வெளியிட்டனா். நெரிசலை அகற்றி, விரைவில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.