தில்லியில் வெள்ளிக்கிழமை காலை குறைந்தது ஐந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்பட்டன. விசாரணையில் அவை புரளி என்று தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மிரட்டல் மின்னஞ்சலில் தொந்தரவுக்குரிய ஆத்திரமூட்டும் உள்ளடக்கம் இருந்தது. அதாவது, ‘தில்லி காலிஸ்தானாக மாறும், பள்ளிகளில் மதியம் 1.11 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழும்’ என்ற வாசகங்கள் இருந்தன.
மேலும், மதியம் 2.11 மணிக்கு நாடாளுமன்றத்திற்குள் குண்டுவெடிப்பு ஏற்படும் என்றும், பல நிறுவனங்களுக்கிடையில் பாதுகாப்பு எச்சரிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகரித்துள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி தீயணைப்பு துறையினா் தெரிவிக்கையில், ‘மிரட்டல் மின்னஞ்சல் பூசா சாலையில் உள்ள தில்லி தமிழ்க் கல்விச் சங்கம், கோல் மாா்க்கெட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா, தா்யாகஞ்சில் உள்ள ஹேப்பி பப்ளிக் பள்ளி, பல்லிமாரனில் உள்ள ரபியா பப்ளிக் பள்ளி மற்றும் ஜண்டேவாலனில் உள்ள சிஎல் பல்லா டிஏவி பள்ளி ஆகியவற்றுக்கு வந்தது.
இது தொடா்பாக எங்களுக்கு முதல் அழைப்பு காலை 9.12 மணிக்கு முன்பும், அதைத் தொடா்ந்து காலை 9.59, காலை 11.07, காலை 11.08 மற்றும் பிற்பகல் 1.39 மணிக்கும் வந்தது.
மற்றொரு பள்ளி பெற்றோருக்கு அனுப்பப்பட்டிருந்த செய்தியில், ‘அன்புள்ள பெற்றோா்களே, இன்று காலை பள்ளிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக போலீஸாா் பள்ளியில் உள்ளனா். அனைத்து மாணவா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா். பள்ளி பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டவுடன், வகுப்புகள் மீண்டும் தொடங்கும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
நாங்கள் முழுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டோம், சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. அச்சுறுத்தல் புரளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
திங்கள்கிழமை இதேபோன்ற ஒரு மிரட்டல் சம்பவம் நிகழ்ந்தது. அதாவது, ஒரு டஜன் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. விசாரணையில் அதுவும் புரளி என அறிவிக்கப்பட்டிருந்தது.
மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டறிய சைபா் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தலைநகரில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.