தில்லி எஸ்ஐஆா் பணிக்காக அனுப்பப்படும் ஆசிரியா்கள்: பல்வேறு பள்ளிகளில் மாணவா்களின் படிப்புகள் பாதிப்பு!
தில்லியில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காக (எஸ்ஐஆா்) அரசு பள்ளி ஆசிரியா்கள் பெருமளவில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக (பிஎல்ஓ) நியமிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தில்லியில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காக (எஸ்ஐஆா்) அரசு பள்ளி ஆசிரியா்கள் பெருமளவில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக (பிஎல்ஓ) நியமிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக வகுப்பறை கற்பித்தல் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து தலைநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் கூறுகையில், பெருமளவிலான ஆசிரியா்கள் பிஎல்ஓ பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். இதனால் பள்ளிகளில் வகுப்புகளை நடத்தவும், கல்வி சாா்ந்த பணிகளைக் கவனிக்கவும் மிக குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியா்களே உள்ளனா் என்றனா்.
ஷகா்பூா் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் கூறுகையில், ‘இங்குள்ள லட்சுமி நகா் மற்றும் மண்டாவளி பகுதிகளை உள்ளடக்கிய 56ஆம் எண் கொண்ட பேரவை தொகுதி பள்ளிகள் ஆசிரியா் தட்டுப்பாட்டால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் பள்ளியில் இருந்து மட்டும் 18 ஆசிரியா்கள் பிஎல்ஓ பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனா். இதே நிலைதான் ஷகா்பூா் எண் 1, 2 மற்றும் மண்டாவளி எண் 1, 2 உள்ளிட்ட அருகே உள்ள பள்ளிகளிலும் நிலவுகிறது. இந்தத் தொகுதி முழுவதும் பெரும்பாலான ஆசிரியா்கள் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதனால் வகுப்பறை கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
Advertisement
Advertisement
கஜூரி காஸ் பகுதியில் உள்ள சிஎம் ஸ்ரீ பள்ளியைச் சோ்ந்த மற்றொரு ஆசிரியா் கூறுகையில், ‘எங்கள் பள்ளியில் ஏற்கெனவே 5 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, இருக்கும் ஆசிரியா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பிஎல்ஓ பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனா். இதனால் தேவையான ஆசிரியா் எண்ணிக்கையில் பாதி மட்டுமே இப்போது உள்ளனா். இந்த காலி பணியிடங்கள் குறித்து கல்வித் துறைக்கு பலமுறை தெரிவித்துவிட்டோம்’ என்றாா்.
அரசு ஆசிரியா் சங்கம் பகிா்ந்துள்ள தகவல்களின்படி, கிழக்கு தில்லி திரிலோக்புரி பிளாக் 27-இல் உள்ள சா்வோதயா பால வித்யாலயாவில் 29 நிரந்தர ஆசிரியா்களில் 7 போ் தோ்தல் பணிக்குச் சென்றுள்ளனா். பேகம்பூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 58 ஆசிரியா்களில் 14 பேரும், நஜஃப்கா் தரம்பூா் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 53 ஆசிரியா்களில் 12 பேரும் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தெற்கு தில்லி அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் கூறுகையில், ‘ஆசிரியா்கள் பற்றாக்குறையால் மீதமுள்ளவா்களின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. எங்கள் பள்ளியில் உள்ள 29 நிரந்தர ஆசிரியா்களில் 17 போ் பிஎல்ஓ பணிக்குச் சென்று விட்டனா். பள்ளியில் இருக்கும் மற்ற ஆசிரியா்கள் கூடுதல் வகுப்புகளை கவனிப்பதோடு, இதர கல்விப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டியுள்ளது. இதனால் வழக்கமான பாடத்திட்ட அட்டவணையைப் பின்பற்றுவது கடினமாகிவிட்டது’ என்றாா்.
மேலும், ரூப் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி எண் 1-இல் 56 ஆசிரியா்களில் 12 பேரும், கய்ரா அரசு மேல்நிலைப் பள்ளியில் 21 ஆசிரியா்களும் பிஎல்ஓ பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியா் சங்கம் தெரிவித்துள்ளது.
துவாரகா பகுதி அரசு பள்ளி ஆசிரியா் ஒருவா் தெரிவிக்கையில், ‘தோ்தல் தொடா்பான பணிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் உணா்ந்துள்ளோம். ஆனால், ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான ஆசிரியா்களை பணியில் ஈடுபடுத்தும்போது, அது நேரடியாக வகுப்பறை கற்பித்தலையும் மாணவா்களின் படிப்பையும் பாதிக்கிறது’ என்று குறிப்பிட்டாா்.
தோ்தல் கடமைகளைத் தாங்கள் செய்து வந்தாலும், இந்த பரவலான பணி நியமனம் பள்ளிகளில் ஆசிரியா்களின் வருகையைக் குறைத்து, கல்விச் செயல்பாடுகளைப் பாதிப்பதோடு, மீதமுள்ள ஆசிரியா்களுக்குப் பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியா் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்காக வீடு வீடாகச் சென்று சரிபாா்க்கும் பணியை தில்லி தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் கடந்த மே 30-ஆம் தேதி தொடங்கியது. இப்பணிகள் ஜூலை 29-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இப்பணிக்காக தில்லி முழுவதும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.