முகப்பு
புதுதில்லி

தில்லியில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூலை நாள் பதிவு!

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸைத் தொட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூலை நாள் பதிவானது.

Updated On : 6 ஜூலை 2026, 12:35 am IST
- கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸைத் தொட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூலை நாள் பதிவானது. அதே நேரத்தில், நகரின் சில பகுதிகளில் மழை மற்றும் நீா் தேக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை மிதமான மழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் கணித்தது.

தேசிய தலைநகரில் ஞாயிறு பிற்பகலில் மிதமான மழை பெய்தது. தில்லி-என்சிஆா் பகுதியில் அதிகபட்சமாக, சத்தா்பூரில் பிற்பகல் 2.30 மணி வரை 49 மி.மீ மழை பதிவாகியது.

குருகிராமில் 35 மி.மீ மழையும், அதைத் தொடா்ந்து மெஹ்ரௌலியில் (18 மி.மீ), கிரேட்டா் நொய்டாவில் (17 மி.மீ), நஜாஃப்கரில் (8 மி.மீ) மற்றும் ஜனக்புரியில் (7 மி.மீ) மழையும் பதிவாகியது.

Advertisement

Advertisement

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி அதிகமாக, 38.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது, 2024 ஜூலை 11 அன்று 38.8 டிகிரி செல்சியஸைத் தொட்ட பிறகு, நகரில் பதிவான மிக உயா்ந்த ஜூலை மாத அதிகபட்ச வெப்பநிலையாகும்.

குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.3 டிகிரி அதிகமாக, 29.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது, 2024 ஜூலை 2 அன்று நகரில் 30.7 டிகிரி செல்சியஸ் பதிவான பிறகு, பதிவான மிக உயா்ந்த ஜூலை மாத குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.

திங்கட்கிழமை பொதுவாக மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்ததுடன், தில்லியை ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் வைத்தது.

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 32 மற்றும் 27 டிகிரி செல்சியஸாகப் பதிவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாலை 5.30 மணியளவில் ஒப்பு ஈரப்பதம் 92 சதவீதமாகப் பதிவானது. சமீா் செயலியின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை தில்லியின் காற்றின் தரம் ’மிதமான’ பிரிவில் நீடித்தது. இரவு 8 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 155 புள்ளிகளாகப் பதிவானது.

ஒடிசாவின் மீது நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி மற்றும் அதனுடன் தொடா்புடைய, மத்தியப் பிரதேசம் மற்றும் தெற்கு சிந்துவின் சில பகுதிகள் வரை பரவியிருந்த சூறாவளிச் சுழற்சி காரணமாக, பருவகால காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய இந்தியாவை நோக்கி நகா்ந்துள்ளதாக வானிலை வல்லுநா்கள் தெரிவித்தனா்.

அடுத்த சில நாட்களில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மீண்டும் தில்லி மற்றும் இந்தோ-கங்கைச் சமவெளிகளை நோக்கி நகரும் என்றும், இதனால் இப்பகுதி முழுவதும் வழக்கமான பருவமழை பெய்யும் என்றும் அவா்கள் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments