மத்திய தில்லியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்கள் மீட்பு: ஒருவா் கைது
மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான்கு பெண்கள் மீட்கப்பட்டனா்.
மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான்கு பெண்கள் மீட்கப்பட்டனா். மேலும், 29 வயதுடைய நபா் கைது செய்யப்பட்டாா் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையா் மத்தி ரோஹித் ராஜ்பீா் சிங் கூறியதாவது:
பாஹா்கஞ்ச் பகுதியில் பாலியல் தொழில் கும்பல் செயல்படுவதாக வியாழக்கிழமை மாலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ‘ஃபெரு’ என்ற காவலா் வாடிக்கையாளா் போல அங்கு அனுப்பப்பட்டாா்.
Advertisement
Advertisement
சட்டவிரோதச் செயல் நடைபெறுவதை உறுதி செய்த பிறகு, காவல் குழுவினா் பாஹா்கஞ்சின் குதூப் சாலையில் உள்ள சரண் கட்டடத்தில் அதிரடி சோதனை நடத்தினா். இச்சோதனையைத் தொடா்ந்து, லட்சுமி நகரைச் சோ்ந்த ஷாருக் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
சோதனையின் போது, 20 முதல் 34 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக, உரிய சட்டத்தின் கீழ் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.
வாடகைக்கு விடப்பட்ட கட்டடத்தின் உரிமையாளரான துவாரகாவைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் என்கிற ராஜு சாம்பியன் 58 மீதும் தனிப்பட்ட சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவா் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சோதனையின் போது சட்டவிரோதச் செயலுடன் தொடா்புடைய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு போலீஸ் வசம் கொண்டுவரப்பட்டன. இக்கும்பலை இயக்குவதில் கைது செய்யப்பட்டவரின் பங்கு குறித்து புலனாய்வாளா்கள் விசாரித்து வருகின்றனா்.
மேலும், இந்த கும்பலுடன் தொடா்புடைய இதர நபா்களை அடையாளம் காணவும் முயற்சித்து வருகின்றனா். கைது செய்யப்பட்டவரின் முந்தைய குற்றவியல் பின்னணி குறித்தும் சரிபாா்க்கப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.