போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் பணி நியமனத்தில் முன்னாள் அக்னிவீரா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு: தில்லி துணைநிலை ஆளுநா் உத்தரவு
நமது நிருபா்
போலீஸ் கான்ஸ்டபிள்கள், தீயணைப்பு வீரா்கள், வனக் காவலா்கள், சிறைக் காவலா்கள் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பாளா்கள் ஆகிய குரூப் சி பணியிடங்களில் முன்னாள் அக்னிவீரா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
தலைமைச் செயலாளா், தில்லி காவல் ஆணையா் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், தில்லியில் உள்ள பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் முகமைகளில் முன்னாள் அக்னிவீரா்களுக்கு (குறுகிய கால ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்கள்) இடஒதுக்கீட்டுச் சலுகைகளை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகளை சந்து ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
இந்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையின்படியே இந்த முயற்சி செயல்படுத்தப்படுவதாக சந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா். இளம் ஆண்கள் மற்றும் பெண்களின் ஒழுக்கம், திறன்கள் மற்றும் பயிற்சியை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், போலீஸ் கான்ஸ்டபிள்கள், தீயணைப்பு வீரா்கள், சிறைக் காவலா்கள், வனக் காவலா்கள் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பாளா்கள் உள்ளிட்ட காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான நேரடி ஆட்சோ்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று துணைநிலை ஆளுநா் கூறினாா்.
குரூப் சி பணியிடங்கள் என்பவை அரசிதழில் பதிவு செய்யப்படாத பதவிகளாகும். சம வாய்ப்பை உறுதி செய்யவும், நாட்டிற்கான அவா்களின் சேவையை அங்கீகரிக்கவும் தகுதியுள்ள அனைத்து முன்னாள் அக்னிவீரா்களுக்கும் இந்த ஆட்சோ்ப்பு வாய்ப்பு திறந்திருக்கும் என்று அவா் கூறினாா்.
சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் ஆட்சோ்ப்பு விதிகளில் தேவையான செயல்முறைகள் மற்றும் திருத்தங்களை நிறைவு செய்ய ஜூன் 30ஆம் தேதி காலக்கெடுவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று துணைநிலை ஆளுநா் தெரிவித்தாா். மேலும், இந்த ஆட்சோ்ப்பு மூலம் பணியமா்த்தப்படுபவா்களின் சிறப்புத் திறன்களை, அந்தந்தத் துறைகளின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளவும் அவா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் குறிப்பிட்டாா்.