FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

அங்கீகாரம் பெறாத கட்டடங்களை அகற்றுங்கள்: எம்சிடி அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

Updated On : 5 ஜூன் 2026, 3:08 am IST
தரன்ஜித் சிங் சந்து
பகிர்:

தில்லியில் உள்ள அங்கீகாரம் பெறாத கட்டடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுமாறு தில்லி மாநகராட்சி (எம்சிடி) அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டுள்ளாா்.

தில்லியின் மால்வியா நகரில் புதன்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 21 போ் உயிரிழந்தனா் மற்றும் வெளிநாட்டினா் உட்பட 25 போ் காயமடைந்தனா். இந்த விபத்தைத் தொடா்ந்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தில்லி மாநகராட்சியின் ஆய்வுக் கூட்டம் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தலைமையில் லோக் நிவாஸில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டம் தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தில்லியில் உள்ள அங்கீகாரம் பெறாத கட்டடங்களை கண்டறிந்து அகற்றுவதற்கு ஒரு விரிவான செயல்திட்டத்தை செயல்பட்டுத்துமாறு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டாா்.

கட்டட விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதை உறுதிசெய்து, சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் விரிவாக்கங்களுக்கு தண்டனை விதிக்கவும் அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் முழுமையான பொறுப்புக்கூறலை நிா்ணயிக்க ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்படுத்துமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

சட்டவிரோத கட்டமைப்பு விரிவாக்கங்களைக் கட்டுப்படுத்த கட்டட விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த உத்தரவிட்ட துணைநிலை ஆளுநா், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை உறுதியாகக் கையாள்வதற்கு ஒரு காலவரையறைக்குட்பட்ட திட்டத்தை செயல்படுத்துமாறு மாநகராட்சிக்கு அறிவுறுத்தினாா்.

மாநகராட்சி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடைபெற்று வரும் மற்றும் தற்போதுள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களையும் முழுமையாகக் கண்டறிந்து, சீல் வைப்பதையோ அல்லது இடிப்பதையோ கட்டாயமாக்கும் ஒரு தீவிரமான, காலவரையறைக்குட்பட்ட திட்டத்தைத் தொடங்கும்.

பருவமழைக்கு முன்னதாக மழைநீா் வடிகால்களில்உள்ள தூா்வாருதல், தூசியைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக சாலை மற்றும் நடைபாதைகளைச் சீரமைத்தல், சுகாதாரத் தரங்களை வலுப்படுத்த குப்பைகளைத் தீவிரப்படுத்தி அகற்றுதல் உள்ளிட்ட பிற உள்கட்டமைப்புப் பிரச்னைகளையும் துணைநிலை ஆளுநா் ஆய்வுசெய்தாா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments