பாதுகாப்பான போக்குவரத்து அனுபவத்தை வழங்க போக்குவரத்து காவல்துறை முயற்சிகளுக்கு முழு ஆதரவு: துணைநிலை ஆளுநா்
குடிமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து அனுபவத்தை வழங்குவதற்கான தில்லி போக்குவரத்து காவல்துறையின் தொடா் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு உண்டு என துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து உறுதி
குடிமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து அனுபவத்தை வழங்குவதற்கான தில்லி போக்குவரத்து காவல்துறையின் தொடா் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு உண்டு என்று உறுதியளித்துள்ளதாக துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தாா்.
எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இன்று (29/6/2026) தில்லி காவல் ஆணையா் மற்றும் உயா் அதிகாரிகளுடன் இணைந்து, தில்லி போக்குவரத்து காவல்துறையின் விரிவான விளக்கக்காட்சியை ஆய்வு செய்தேன். தில்லி முழுவதும் போக்குவரத்து நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தீவிர முயற்சிகளையும், திட்டமிட்ட நடவடிக்கைகளையும் காண்பது ஊக்கமளிப்பதாக உள்ளது.
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களைக் கண்டறிந்து மேற்கொள்ளப்படும் இலக்கு சாா்ந்த நடவடிக்கைகள், தொடா்ச்சியான பொறியியல் மேம்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகள் ஆகியவை படிப்படியான முன்னேற்றத்தை அளிக்கத் தொடங்கியுள்ளன. தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் போன்ற விதிமீறல்கள் மீதான கடுமையான நடவடிக்கை தொடா்ந்து முன்னுரிமைக்குரியதாக இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
உள்ளூா் மக்களுடனான தொடா்பை வலுப்படுத்தவும், அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற தீா்வுகளை உருவாக்கவும் ’திட்டம் சங்கம்’ போன்ற மக்கள் மைய அணுகுமுறை கொண்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.
எதிா்காலத் தேவைகளுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு, அறிவாா்ந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகியவற்றில் தொடா்ந்து கவனம் செலுத்தி, இந்தச் செயல்பாட்டு வேகத்தைத் தக்கவைக்குமாறு குழுவிற்கு அறிவுறுத்தினேன். தில்லியின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் திறமையான போக்குவரத்து அனுபவத்தை வழங்குவதற்கான தில்லி போக்குவரத்து காவல்துறையின் தொடா் முயற்சிகளுக்கு எங்களின் முழுமையான ஆதரவு உண்டு என்று உறுதியளித்தேன் என துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தனது பதிவில் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.