டெலிகிராம் செயலிக்கு தடை மூலம் நீட் வினாத்தாள் கசிவை தடுக்க முடியாது: அரவிந்த் கேஜரிவால்
நமது நிருபா்
நீட் தோ்வு வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நடவடிக்கையாக டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கும் அரசின் முடிவை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கேள்விக்குள்ளாக்கினாா்.
இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சினையின் மூலக் காரணத்திற்குத் தீா்வு காணாது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
Advertisement
Advertisement
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட காணொளிச் செய்தி ஒன்றில், அந்தச் செய்திப் பரிமாற்றச் செயலியைத் தடை செய்வது இந்தப் பிரச்சனைக்குத் தீா்வு ஆகாது என்று குறிப்பிட்ட கேஜரிவால், இப்பிரச்சனையைக் கையாள்வதில் அதிகாரிகள் தீவிரமான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினாா்.
வினாத்தாள் கசிவு விவகாரம் என்பது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு தொழிலாக உள்ளது, என்று கூறிய அவா், இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஈட்டப்படும் பெரும் தொகையானது செல்வாக்கு மிக்க நபா்களைச் சென்றடைவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.
வினாத்தாள் கசிவு மோசடிகள் மூலம் கிடைக்கும் பணம், சட்டமன்ற உறுப்பினா்களை விலைக்கு வாங்குவது உள்ளிட்ட அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் தில்லியின் முன்னாள் முதலமைச்சா் மேலும் குற்றஞ்சாட்டினாா்.
அமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டுவரப்படாத வரை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் தொடரும் என்று கூறிய கேஜரிவால், சீா்திருத்தங்களை வலியுறுத்த மக்கள் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தாா். முழு அமைப்பும் மாற வேண்டும், என்று கேஜரிவால் கூறினாா்.
கடந்த மாதம் நடந்த நீட் இளங்கலை தோ்வானது வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு காரணமாக ரத்து செய்யப்ட்டு மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், முறைகேடு கும்பல்கள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெலிகிராம் செயலி மீதான அணுகலை அரசு செவ்வாய்க்கிழமை அன்று தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியது.