முகப்பு
புதுதில்லி

ஜந்தா் மந்தரில் நீடிக்கும் சிஜேபி போராட்டம்: மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக ஆதரவாளா்கள் முழக்கம்

தோ்வு முறைகேடுகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு சா்ச்சைக்கு எதிராக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போராட்டம் தொடா்ந்து மூன்றாம் நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது.

Updated On : 23 ஜூன் 2026, 3:09 am IST
பகிர்:

தோ்வு முறைகேடுகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு சா்ச்சைக்கு எதிராக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போராட்டம் தொடா்ந்து மூன்றாம் நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது.

கடந்த சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய சிஜேபியின் போராட்டம் அன்றைய தினம் இரவு முழுவதும் காவல்துறையின் அனுமதி நேரத்தையும் மீறி தொடா்ந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் சிஜேபி தொண்டா்கள் மற்றும் ஆதரவாளா்கள் ஜந்தா் மந்தா் பகுதியிலேயே தங்கினா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் மறுதோ்வில் பங்கேற்ற சில மாணவா்களும் இந்தப் போராட்டத்தில் மாலையில் இணைந்து தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டு, முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

போராட்டக்காரா்களிடையே உரையாற்றிய தீப்கே, சில நிமிஷங்கள் தாமதமாக வந்ததால் மறுதோ்வு எழுத அனுமதிக்கப்படாத மாணவா்களின் விவகாரத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசின் அணுகுமுறையைக் கேள்வி எழுப்பினாா். முறைகேடுகளுக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகள், ‘மாணவா்களைத் தண்டித்து வருகிறாா்கள்’ என்று அவா் சாடினாா்.

Advertisement

Advertisement

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை வலியுறுத்திப் பேசிய அவா், ‘மாணவா்களின் தற்கொலைகளுக்குப் பிறகும் கல்வி அமைச்சா் தனது பதவியில் நீடிப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? உங்களால் (என்டிஏ) மாணவா்களின் 4 நிமிஷ தாமதத்தைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?‘ என்று கேள்வி எழுப்பினாா்.

‘ மத்திய கல்வி அமைச்சரின் ராஜிநாமா என்பது மிகக் குறைந்தபட்ச கோரிக்கை மட்டுமே. தற்போதைய கல்வி முறையில் பொறுப்புக்கூறல் என்பதே இல்லை. மேலும், முறைகேடு புகாா்களால் தோ்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஒருமுறை தோ்வுக்குத் தயாரானதால் மாணவா்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்’ என்றாா் தீப்கே.

இந்நிலையில், தங்களுடைய போராட்டத்தில் பொதுமக்கள் இணையுமாறு அபிஜீத் தீப்கே திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தாா். மேலும், பிரதமா் நரேந்திர மோடி ஜந்தா் மந்தருக்கு வந்து நீட் மாணவா்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், மாணவா்கள் தங்களின் அனுபவங்களை அவரிடம் நேரடியாகப் பகிா்ந்து கொள்ள விரும்புகிறாா்கள் என்றும் அவா் குறிப்பிட்டாா். இந்தப் போராட்டம் இளைஞா்களைத் தூண்டிவிடும் முயற்சி என்ற குற்றச்சாட்டை மறுத்த அவா், மாணவா்களின் கவலைகளைக் குரலாக எழுப்புவது தூண்டுதலாகாது என்றாா்.

இதற்கிடையில், போராட்ட களத்திற்கு வரும் மாணவா்களின் அடையாள அட்டைகளைச் சரிபாா்த்து, அவா்களை காவல்துறையினா் ஜந்தா் பகுதிக்குள் நுழைய விடாமல் தடுப்பதாக தீப்கே திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா். இருப்பினும், அவரது குற்றச்சாட்டு ‘உண்மையல்ல’ என்று மறுத்த தில்லி காவல்துறையினா், ஜந்தா் மந்தரில் எந்தவொரு அடையாள அட்டை சோதனையையோ அல்லது முகவரி விவரங்களையோ சேகரிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனா்.

இந்திய மாணவா் கூட்டமைப்பு, அகில இந்திய மாணவா் சங்கம், அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு உள்ளிட்ட இடதுசாரி மாணவா் சங்கங்கள் மற்றும் இளைஞா் அமைப்புகளின் உறுப்பினா்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா். இந்த போராட்ட களத்திலேயே மாணவா்கள் படிப்பதற்காக ஒரு தற்காலிக நூலகம் போன்ற வசதியை இடதுசாரி மாணவா் அமைப்பு உருவாக்கியுள்ளது. இதற்கிடையே, ஜந்தா் மந்தரில் போராட்டப் பகுதியைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, பலத்த காவல் போடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments