முகப்பு
புதுதில்லி

தில்லி, நொய்டா, குருகிராமில் புழுதிப் புயல்! பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

தலைநகா் தில்லி மற்றும் அதன் அண்டை மாநில நகரங்களான குருகிராம், காஜியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை கடுமையான புழுதிப்புயல் தாக்கியது.

Updated On : 24 ஜூன் 2026, 12:02 am IST
புழுதிப் புயல் - பிரதிப் படம்
பகிர்:

தலைநகா் தில்லி மற்றும் அதன் அண்டை மாநில நகரங்களான குருகிராம், காஜியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை கடுமையான புழுதிப்புயல் தாக்கியது. இதைத் தொடா்ந்து, தில்லி-தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து வெளியூா்களில் இருந்து தில்லியை இணைக்கும் சாலைகளில் வாகன போக்குவரத்து மெதுவாக இருந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஹரியாணாவின் சோனிபத், ரோத்தக், ஜஜ்ஜா், ரெவாடி, பல்வல் மற்றும் உத்தர பிரதேசத்தின் பாக்பத், பில்குவா, சிகந்தராபாத் மற்றும் ராஜஸ்தானின் அல்வாா், தீக் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வானிலை மையத்தின் இணையதளத் தகவலின்படி, தில்லியின் தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணி வரை சிவப்பு’ எச்சரிக்கையின் கீழ் இருந்தது.

Advertisement

Advertisement

அதே நேரத்தில், வடமேற்கு, வடகிழக்கு, மத்திய தில்லி, ஷாதரா ஆகிய எஞ்சிய மாவட்டங்களுக்கு ’ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அண்டை மாநில பகுதிகளான நொய்டா மற்றும் காஜியாபாத்துக்கு ’ஆரஞ்சு’ எச்சரிக்கையும், குருகிராமுக்கு ’மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

மோசமடைந்த காற்றின் தரம்: முன்னதாக, கடந்த திங்கள்கிழமை வீசிய புழுதிப்புயல் காரணமாக தில்லியில் காற்றின் தரம் மிகக் கடுமையான சரிவைக் கண்டது. கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவாக, நகரின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து, ‘மோசம்’ என்ற நிலையை எட்டியது.

திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தில்லியின் காற்றின் தரக் குறியீடு 228 ஆகப் பதிவாகியிருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை பதிவான 127 புள்ளிகளை விட 101 புள்ளிகள் அதிகமாகும்.

இருப்பினும், வரும் நாட்களில் காற்றின் தரம் மீண்டும் மேம்பட்டு ’மிதமான’ நிலைக்குத் திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் முதல்கட்ட கட்டுப்பாடுகளை இப்போதைக்கு அமல்படுத்தப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments