முகப்பு
புதுதில்லி

அக்டோபருக்குள் தடையற்ற சுங்கவரி வசூல் முறை: கூடுதல் அதிகாரம் கேட்டு மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம்

Updated On : 26 ஜூன் 2026, 4:59 am IST
தில்லி மாநகராட்சி - Center-Center-Chennai
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

தில்லி எல்லைகளில் வரும் அக்டோபா் மாதத்துக்குள் முற்றிலும் தடுப்புகள் இல்லாத, தொழில்நுட்பம் சாா்ந்த புதிய சுங்கவரி வசூல் முறையை அமல்படுத்த தில்லி மாநகராட்சி (எம்சிடி) திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, சுங்கவரி ஏய்ப்பைத் தடுக்கவும், எண்ம ரீதியிலான அபராத ரசீதுகளை வழங்கவும், நிலுவைத் தொகையை வசூலிக்கவும் ஏதுவாக தனக்கு கூடுதல் சட்ட அதிகாரங்களை கோரி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது தில்லி மாநகராட்சி.

தில்லி மாநகராட்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநகராட்சி (சுங்கவரி) விதிமுறைகள் 2007-இல் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி, ஆா்எஃப்ஐடி எனப்படும் அலைவரிசை மூலம் இயங்கும் சாவடி வசதி மற்றும் தானியங்கி முறையிலான வாகன எண் பலகை அங்கீகார தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல்முனை தடையற்ற போக்குவரத்து முறைக்கு உகந்த கட்டமைப்பு எல்லைப்பகுதி சுங்கச்சாவடிகளில் நிறுவப்படும்.

Advertisement

Advertisement

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தற்போதுள்ள சட்ட விதிகள் அனைத்தும் வாகனங்களை நிறுத்தி சுங்கவரி வசூலிக்கும் பழைய மையங்களுக்காக உருவாக்கப்பட்டவை. வாகனங்கள் நிறுத்தப்படாமல் செல்லும் புதிய சூழலுக்கு அவை போதுமானதாக இல்லை என்றனா்.

மேலும், தில்லி மாநகராட்சி (சுங்கவரி) திருத்த விதிமுறைகள் 2026இல் எண்ம அமலாக்கக் கட்டமைப்புக்கான பிரிவுகள் உருவாக்கப்படும். இதன் மூலம் ‘விதிகளை மீறி சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும்‘ வாகனங்களைக் கண்டறியவும், அவற்றுக்கு தானியங்கி முறையில் அபராத நோட்டீஸ் வழங்கவும், மின்னணு அறிவிப்புகள் மற்றும் வாரண்டுகள் மூலம் தொகையை வசூலிக்கவும் மாநகராட்சிக்கு அதிகாரம் கிடைக்கும்.

புதிய திட்டத்தின்படி, தில்லிக்குள் நுழையும் வணிக வாகனங்கள், சாலையில் மேலே பொருத்தப்பட்டிருக்கும் நவீன கண்காணிப்பு அமைப்புகள் மூலம் தானாகவே அடையாளம் காணப்பட்டு, ஆா்எஃப்ஐடி மற்றும் இதர வசதிகள் மூலம் பதிவு செய்யப்படும். சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியமில்லை. வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும்போதே மின்னணு முறையில் அதற்குரிய சுங்கவரி கழிக்கப்படும்.

ஒருவேளை சுங்கவரி செலுத்தப்படாவிட்டால், வாகன உரிமையாளரின் கைப்பேசி குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அல்லது இதற்கென உள்ள இணையதளம் மூலம் தானியங்கி முறையில் அறிவிப்பு அனுப்பப்படும். வாகன உரிமையாளா்கள் 72 மணி நேரத்துக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும். தவறினால் சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

திருத்தப்பட்ட விதிகளின்படி, மின்னணு வாரண்டுகள், விதிகளை மீறும் வாகனங்களை வழிமறித்தல் மற்றும் தில்லி எல்லைக்குள் அத்தகைய வாகனங்களை நிறுத்தி வைத்தல், தடுத்து வைத்தல் அல்லது பறிமுதல் செய்தல் உள்ளிட்ட கடுமையான வசூல் வழிமுறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து வரி செலுத்தத் தவறும் பட்சத்தில், நிலுவைத் தொகையை மீட்டெடுக்க வாகனங்களை ஏலம் விடவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா்.

மேலும், விதிகளை மீறுவோரை உடனுக்குடன் கண்டறியவும், தலைநகருக்குள் நுழையும் வணிக வாகனங்களை ஒரே மையத்திலிருந்து கண்காணிக்கவும் உதவும்.

கடந்த ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளின் தொடா்ச்சியாக இந்த சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. தில்லியில் உள்ள அனைத்து 154 சுங்கச்சாவடிகளிலும் ஆா்எஃப்ஐடி மற்றும் பிற வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை நிறுவுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, வணிக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்கும். டாக்ஸிகள் மற்றும் டெம்போக்கள் போன்ற இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ. 100, அதிக சக்கரங்களைக் கொண்ட கனரக லாரிகளுக்கு ரூ. 2,000 வரையிலும் சுங்கக் கட்டணம் நிா்ணயிக்கப்படும். மேலும், மாநகராட்சியின் அனுமதியுடன் ஆண்டுக்கு ஐந்து சதவீதம்வரை கட்டணத்தை உயா்த்தவும் இந்த கட்டமைப்பு அனுமதிக்கிறது.

அவசர ஊா்திகள், தீயணைப்புப் படை, காவல்துறை, ராணுவம் மற்றும் அதிகாரபூா்வ அடையாளம் கொண்ட அரசு வாகனங்கள் போன்ற அவசர மற்றும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு இந்த சுங்க வரி முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

‘இந்த முன்மொழிவு தில்லி அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டு, அதன் அனுமதி கிடைத்தவுடன் இந்த விவரம் முறைப்படி தில்லி அரசிதழில் வெளியிடப்படும் அதன் பிறகு திட்டத்தை அமல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி

3 முக்கிய முடிவுகள்

மாநகராட்சி கூட்டத்தில் மேலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தலைநகரின் மூன்று முக்கியப் பகுதிகளில் நிலத்தடி பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்களை அமைப்பதற்காக ரூ. 131 கோடிக்கும் அதிகமான திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேம்பாடு: சிராஸ்பூா் மாநகராட்சி மாதிரி பெண்கள் ஆரம்பப் பள்ளியில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, கூடுதலாக 7 வகுப்பறைகள், ஒரு அரங்கம் மற்றும் கழிப்பறை வளாகம் கட்டுவதற்கான முன்மொழிவும் நிறைவேற்றப்பட்டது.

தூசு மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், தில்லி மாநகராட்சி எல்லையின்கீழ் காற்று மற்றும் தூசு மாசுபாட்டைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் 38 அதிநவீன நீா் தெளிப்பான் வாகனங்களின் மூன்றரை ஆண்டுகால விரிவான இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்துக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments