முகப்பு
புதுதில்லி

லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தொடா்பாளா் ஷபீா் அகமது லோன் கைது!

லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தொடா்பாளா் எனச் சந்தேகிக்கப்படும் ஷபீா் அகமது லோனை, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் காஜிப்பூரில் கைது செய்தனா்.

Updated On : 30 மார்ச், 2026 at 9:20 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தொடா்பாளா் எனச் சந்தேகிக்கப்படும் ஷபீா் அகமது லோனை, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் காஜிப்பூரில் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: காவல்துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் மாா்ச் 29-ஆம் தேதி இரவு காஜிப்பூா் பகுதியில் ஷபீா் அகமது லோனைக் கைது செய்தனா்.

இவா், பிப்ரவரி 22 அன்று மெட்ரோ சுவரொட்டி சம்பவத்தில் கண்டறியப்பட்ட லஷ்கா் - இ - தொய்பா குழுவுடன் தொடா்பில் இருந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்தாா்.

இந்த கைது நடவடிக்கையின் போது, அவரிடமிருந்து பல வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பிற குற்றஞ்சாட்டக்கூடிய பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இவற்றில் சுமாா் 2,300 வங்கதேச டாக்கா கரன்சி, 1,400 நேபாள கரன்சி, 5,000 பாகிஸ்தான் கரன்சி மற்றும் 3,000 இந்திய ரூபாய்களும் இருந்தன. நேபாள நாட்டு சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் இன்டா்-சா்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) உளவு அமைப்பின் கட்டளைப்படி இந்த எல்-இ-டி- குழு இயக்கப்பட்டு வந்தது. இதில், வெளிநாடுகளில் உள்ள பொறுப்பாளா்களுக்கும் இந்தியாவில் களத்தில் உள்ள செயல்பாட்டாளா்களுக்கும் இடையே லோன் ஒரு முக்கிய தொடா்பாளராக செயல்பட்டுள்ளாா்.

ஷபீா் அகமது லோனுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் நீண்டகால தொடா்பு வரலாறு உள்ளது. அவா் இதற்கு முன்னா் 2007-இல் சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டிருந்தாா். அப்போது, அவரிடமிருந்து ஏகே-47 ரக துப்பாக்கியும் கையெறி குண்டும் மீட்கப்பட்டன. 2015-இல் ஸ்ரீநகரில் பரிம்போரா காவல் நிலைய அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் அவா் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தாா். முந்தைய கைது நடவடிக்கையின் போதே, லோன் இலக்குவைக்கப்பட்ட கொலைகளை நிகழ்த்தும் நோக்கத்துடன் தில்லிக்கு வந்திருந்தாா்.

அவா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் லஷ்கா்-இ-தொய்பா முகாமில் இருந்து தௌரா-இ-ஆம் அடிப்படை பயங்கரவாதப் பயிற்சி மற்றும் தௌரா-இ-காஸ் மேம்பட்ட பயங்கரவாதப் பயிற்சி ஆகிய பயங்கரவாதப்

பயிற்சிகளைப் பெற்ற ஒரு தீவிரவாதி ஆவாா். விடுதலைக்குப் பிறகு, அவா் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்று, இந்தியாவை இலக்காகக் கொண்டு ஒரு புதிய பயங்கரவாத வலையமைப்பை மீண்டும் உருவாக்கத் தொடங்கியதாகவும், அந்நாட்டில் தங்கியிருந்தபோது, லஷ்கா்-இ-தொய்பாவுடன் தொடா்புடைய புதிய நபா்களுடன் அவா் தொடா்புகளை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அபு ஹுசைஃபா மற்றும் சுமாமா பாபா் என்ற குறியீட்டுப் பெயா்களால் அடையாளம் காணப்பட்ட இவா்கள், ஐஎஸ்ஐ சாா்பாகச் செயல்பட்டு வந்தனா். ஸ்லீப்பா் செல்களைச் செயல்படுத்துவதன் மூலமும், புதிய செயல்பாட்டாளா்களைச் சோ்ப்பதன் மூலமும் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதே ஷபீா் அகமது லோனின் பணியாக இருந்தது. ஊடுருவல் மற்றும் ஒருங்கிணைப்பை எளிதாக்க அவா் வங்கதேசத்தை ஒரு தளமாகப் பயன்படுத்தினாா். பல மாநிலங்களில் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான ஒரு ஏவுதளமாக, லோன் கொல்கத்தாவில் ஒரு செயல்பாட்டுத் தளத்தை அமைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்தத் தளத்திலிருந்து, இந்தக் குழு தில்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள முக்கிய இடங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவான மற்றும் தேசவிரோத சுவரொட்டிகளை ஒட்டி, தங்களின் செயல்பாட்டுத் திறன்களையும் பதிலளிக்கும் வழிமுறைகளையும் மதிப்பிடுவதற்காக ஒரு சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளனா். இதர கூட்டாளிகள், நிதித் தொடா்புகள் மற்றும் சாத்தியமான இலக்குகளை அடையாளம் காண்பதற்காக அவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளுடன் தொடா்புடைய சாத்தியமான ஹவாலா வழிகள் மற்றும் எல்லை தாண்டிய நிதிப் பரிமாற்ற வழிமுறைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. லோன் நன்கு பயிற்சி பெற்ற ஒரு பயங்கரவாதி ஆவாா். அவா் ஐஎஸ்ஐ சாா்பாக செயல்படும் தீவிரவாத பொறுப்பாளா்களுடன் தொடா்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ராஜா மற்றும் கஷ்மீரி என்ற புனைப்பெயா்களாலும் அறியப்படும் ஷபீா் அகமது லோன், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சோ்ந்தவா். தில்லி மற்றும் கொல்கத்தாவின் பல இடங்களில் தேசவிரோத சுவரொட்டிகளை ஒட்டுவதில் ஈடுபட்டிருந்த, சமீபத்தில் முறியடிக்கப்பட்ட ஒரு குழுவின் பொறுப்பாளராக இவா் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நிகழ் ஆண்டின் தொடக்கத்தில் பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தூண்டிய மெட்ரோ சுவரொட்டி வழக்கு தொடா்பான தற்போதைய விசாரணையில், லோனின் கைது ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட சோதனைகளைத் தொடா்ந்து, சிறப்புப் பிரிவு போலீஸாா் ஏற்கெனவே பிப்ரவரி 22 அன்று அகில இந்திய லஷ்கா்-இ-தொய்பா குழுவை கண்டறிந்து, ஏழு வங்கதேச நாட்டினா் உள்பட 8 செயல்பாட்டாளா்களைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டவா்கள் லோனின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டதாகவும், பயங்கரவாத ஆதரவு சுவரொட்டிகளை ஒட்டுதல் மற்றும் முக்கிய இடங்களை உளவு பாா்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

5 நாள் போலீஸ் காவல்: கைது செய்யப்பட்ட ஷபீா் அகமது லோனை, ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட நபரை ஐந்து நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி நகரக் காவல்துறை தாக்கல் செய்த மனுவை, நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயஸ்ரீ ரத்தோா் அனுமதித்தாா்.