அமலாக்கத் துறையின் வழக்கில் அல்-பலாஹ் தலைவருக்கு பிணை மறுப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு
அமலாக்கத் துறை விசாரித்து வரும் ரூ. 493 கோடி பணமோசடி வழக்கில், அல்-ஃபலாஹ் தலைவா் ஜவாத் அகமது சித்திக்கியின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமலாக்கத் துறை விசாரித்து வரும் ரூ.493 கோடி பணமோசடி வழக்கில், அல்-ஃபலாஹ் தலைவா் ஜவாத் அகமது சித்திக்கியின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவா் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பதி ஷீத்தல் சௌத்ரி பிரதான், சித்திக்கியின் பிணை மனுவை நிராகரித்தாா். அவா் விடுவிக்கப்பட்டால் சாட்சிகளைப் பாதிக்கக்கூடும் என்றும் அவா் கூறினாா். ‘ஒட்டுமொத்த உண்மைகள், குற்றத்தின் தீவிரம் மற்றும் மனுதாரரின் கடந்தகால குற்றப் பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த நிலையில் பிணை வழங்க எந்த முகாந்திரமும் இல்லை’ என்று மே 2 ஆம் தேதியிட்ட ஒரு உத்தரவில் நீதிமன்றம் கூறியது.
தில்லி காவல்துறை குற்றப்பிரிவு, நிதி மற்றும் நிா்வாக முறைகேடுகள் தொடா்பாக கடந்த பிப்ரவரியில் சித்திக்கியைக் கைது செய்தது. மாா்ச் மாதம் அமலாக்கத் துறையால் அவா் சிறையிலிருந்து காவலில் எடுக்கப்பட்டாா். அங்கீகாரம் குறித்த மோசடியான மற்றும் தவறான கூற்றுகள் மூலம் அல்-பலாஹ் பல்கலைக்கழகம் மாணவா்களையும் பெற்றோா்களையும் ஏமாற்றியதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
Advertisement
இந்தச் செயல்பாடுகள், கட்டண ரசீதுகள் வடிவில் சுமாா் ரூ. 493.24 கோடி மதிப்பிலான குற்றச் செயல் வருமானம் உருவாக வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.
2025, நவம்பரில் செங்கோட்டை பகுதியில் குண்டுவெடிப்பை நடத்திய டாக்டா் உமா் நபி, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவா் என்பது தெரியவந்ததை அடுத்து, அப்பல்கலைக்கழகம் முன்னதாகவே விசாரணைக்கு உள்ளானது. இந்த குண்டுவெடிப்பில் 12 போ் உயிரிழந்தனா். செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடா்பான ஒரு வழக்கில் அவா் ஒரு இணை குற்றஞ்சாட்டப்பட்டவா் என்பதையும் நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்- ஃபலாஹ்வின் நிா்வாக அறங்காவலா் மற்றும் வேந்தா் என்ற முறையில், அவா் தொண்டு மற்றும் கல்வி நிறுவனங்களைத் தனது தனிப்பட்ட, குடும்ப மற்றும் வணிக நலன்களுக்காகப் பயன்படுத்தி, சட்டபூா்வ கடமைகளை மீறி, தனது நம்பகக் கடமைகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
சித்திக்கி பிணையில் விடுவிக்கப்பட்டால், அவரது நேரடி மேற்பாா்வையின் கீழ் உள்ள பல நிறுவன ஊழியா்களான சாட்சிகளை அவா் செல்வாக்கு செலுத்தக்கூடும் என்றும் நீதிபதி கூறினாா்.
பிணை மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஒட்டுமொத்த உண்மைகள், குற்றத்தின் தீவிரம் மற்றும் மனுதாரரின் கடந்தகால குற்றப் பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த நிலையில் பிணைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று முடிவு செய்தது.