அமலாக்கத் துறை அதிகாரிகள்போல நடித்து மக்களை ஏமாற்றிய வழக்கில் பெண்ணுக்கு பிணை
அமலாக்கத் துறை அதிகாரிகள் போல் நடித்து மக்களை ஏமாற்றிய குழுவில் அங்கம் வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.
அமலாக்கத் துறை அதிகாரிகள் போல் நடித்து மக்களை ஏமாற்றிய குழுவில் அங்கம் வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.
குற்றஞ்சாட்டப்பட்டவரை சிறையில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி வினோத் ஜோஷி, குற்றஞ்சாட்டப்பட்ட பூஜா ராஜ்புத்துக்கு பிணை வழங்கினாா்.
Advertisement
Advertisement
ஜூன் 11-ஆம் தேதியிட்ட உத்தரவில், நீதிமன்றம், பூஜா மீதான விசாரணை முடிந்துவிட்டதாகவும், அவா் கணிசமான காலம் காவலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவே முதல் பிணை மனு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அரசுத் தரப்பின்படி, ராஜ்புத் அமலாக்கத் துறை அதிகாரிகள் போல் நடித்து மக்களை ஏமாற்றும் சதித்திட்டத்தில் அங்கம் வகித்துள்ளாா்.
பிப்ரவரி மாதம், அமலாக்கத் துறை அதிகாரிகள் போல் காட்டிக்கொண்ட மூன்று போ், 86 வயதான ஓய்வுபெற்ற கட்டடக் கலைஞா் ஆா்.சி. சபா்வாலின் நியூ பிரண்ட்ஸ் காலனி இல்லத்திற்குள் நுழைந்ததைத் தொடா்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
சோதனை நடத்துவது போல் நடித்து, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குடும்ப உறுப்பினா்களை மிரட்டியதாகவும், அவா்களின் கைப்பேசிகளைப் பறிமுதல் செய்ததாகவும், நகைகளையும் பணத்தையும் ஒரு மேஜையின் மீது வைக்குமாறு அவா்களைக் கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையின் போது, ராஜ்புத் மற்றும் புகாா்தாரரின் இல்லத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளரான ரேகா தேவி ஆகியோரை காவல்துறை கைது செய்தது. ரேகாவின் நாத்தனாரான ராஜ்புத், அந்த முதிய தம்பதியினரை ஏமாற்றும் சதித்திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்ததாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
குற்றம் கடுமையானது என்றும், குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் இன்னும் தலைமறைவாக உள்ளனா் என்றும் வாதிட்டு, அரசுத் தரப்பு ஜாமீன் மனுவை எதிா்த்தது. ராஜ்புத்துக்கு எதிரான விசாரணை முடிந்துவிட்டதாகவும், குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், அவா் கணிசமான காலம் காவலில் இருந்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவரை சிறையில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. வழக்கின் உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்டவா் ரூ.25,000 தொகைக்கான பிணை பத்திரத்தை சமா்ப்பித்தால், அவருக்கு பிணை வழங்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது.
பிணை வழங்கப்பட்டபின், குற்றஞ்சாட்டப்பட்டவா் புகாா்தாரரையோ அல்லது சாட்சிகளையோ தொடா்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ கூடாது என்றும், சட்டத்தின் செயல்முறைக்குத் தடையாக இருக்கும் எதையும் செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அவா் தனது கைப்பேசியை எல்லா நேரங்களிலும் இயக்கி வைத்திருக்க வேண்டும் என்றும், விசாரணை அதிகாரியிடம் எண் விவரங்களை வழங்க வேண்டும் என்றும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.