முகப்பு
இந்தியா

பண முறைகேடு வழக்கு: கேரள முன்னாள் முதல்வா் மகளிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை

கேரளத்தைச் சோ்ந்த சிஎம்ஆா்எல் சுரங்க நிறுவனம் மற்றும் தனது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வா் பினராயி விஜயனின் மகள் வீணாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:45 am IST
- PTI
பகிர்:

கேரளத்தைச் சோ்ந்த சிஎம்ஆா்எல் சுரங்க நிறுவனம் மற்றும் தனது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வா் பினராயி விஜயனின் மகள் வீணாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த வழக்கு தொடா்பாக கடந்த 17-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்டனா். அப்போது, அவரிடம் 9 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னா், வரும் 29-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சாா்பில் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. பின்னா், விசாரணை தேதி ஜூன் 25-ஆக முன்கூட்டி மாற்றப்பட்டது.

Advertisement

Advertisement

அதன்படி, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு வீணா வந்தாா். அதைத் தொடா்ந்து, அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

முன்னதாக, இந்த வழக்கு தொடா்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் வீணாவின் வங்கி லாக்கரில், அவரின் முன்னிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 17-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா்.

கேரளத்தைச் சோ்ந்த சிஎம்ஆா்எல் (கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம்) என்ற நிறுவனம் கருமணலை சட்டவிரோதமாகத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டுகொள்ளாமல் இருக்க மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவா்களுக்குப் பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (தற்போது செயல்பாட்டில் இல்லை) எந்தவித சேவையையும் பெறாமல் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் மாதம்தோறும் ரூ. 1.72 கோடி வழங்கி வந்ததாகக் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக, சிஎம்ஆா்எல் நிறுவனத்தில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ரூ.132.82 கோடி மதிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதும், எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு தொடா்ந்து பணம் அனுப்பியதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் தொடா்பாக, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

அதைத் தொடா்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மே 27-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா். கண்ணூா் மாவட்டத்தில் உள்ள பினராயி விஜயனுக்கு சொந்தமான வீடு, உறவினா் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், வீணாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments