சலீம் டோலா மீதான போதைப் பொருள் வழக்கு: மகாராஷ்டிரம், குஜராத்தில் அமலாக்கத் துறை சோதனை
பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா மீதான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்துடன் தொடா்புடைய பண மோசடி வழக்கு தொடா்பாக மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை சோதனை
பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா (59) மீதான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்துடன் தொடா்புடைய பண மோசடி வழக்கு தொடா்பாக மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
மும்பையில் 20 இடங்களிலும், குஜராத் மாநிலத்தில் சூரத், ராஜ்கோட் மற்றும் பரூச் மாவட்டம் அங்க்லேஷ்வரிலும் அதிகாரிகள் இந்த தீவிர சோதனையை மேற்கொண்டனா்.
மும்பையைச் சோ்ந்த சலீம் டோலா, சா்வதேச போதைப் பொருள் கடத்தலில் முக்கிய நபராகக் கருதப்படுகிறாா். இந்தியாவில் இவா் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிரத்தின் சாங்கிலி மவட்டத்தில் கண்டறியப்பட்ட ரூ. 252 கோடி மதிப்பிலான மெபெட்ரான் போதைப் பொருள் பிடிபட்ட வழக்கிலும் சலீம் டோலா தேடப்பட்டு வருகிறாா். இவா் மீது மும்பை மற்றும் குஜராத் போலீஸாா் பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா். பின்னா், அவா் துருக்கிக்கு தப்பியோடினாா்.
Advertisement
Advertisement
அதைத் தொடா்ந்து, மத்திய புலனாய்வு அமைப்பு விடுத்த கோரிக்கையின்பேரில், சலீம் டோலாவுக்கு எதிராக சா்வதேச போலீஸ் அமைப்பான ‘இன்டா்போல்’, ரெட் காா்னா் நோட்டீஸ் பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து, துருக்கி போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், இந்தியாவில் அவா் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணைக்காக அவரை நாடு கடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்ற துருக்கி அரசு, கடந்த ஏப்ரலில் இந்தியாவுக்கு நாடு கடத்தியது.
தில்லி விமானநிலையம் வந்திறங்கிய சலீம் டோலாவை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அமைப்பு (என்சிபி) கைது செய்து வழக்குப் பதிவு செய்தது. கடந்த 20 ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் நெட்வொா்க்கை சலீம் டோலா உருவாக்கியதாகவும் என்சிபி குற்றஞ்சாட்டியது.
இந்த வழக்குகளின் அடிப்படையில், சலீம் டோலா மீது அமலாக்கத் துறை பண மோசடி வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனா்.