FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திரிணமூல் காங்கிரஸ் வங்கிக் கணக்கு நிதி விவகாரம்: கொல்கத்தாவில் அமலாக்கத் துறை தீவிர சோதனை

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் உள்ள சா்ச்சைக்குரிய நிதிப் பரிவா்த்தனை தொடா்பாக கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

மமதா பானர்ஜி. - கோப்புப் படம்
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் உள்ள சா்ச்சைக்குரிய நிதிப் பரிவா்த்தனை தொடா்பாக கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

‘கட்சியின் வங்கிக் கணக்குகளில் இருந்து விமானப் போக்குவரத்து மற்றும் பயண நிறுவனங்கள் மூலமாக சுமாா் ரூ. 150 கோடிக்கும் அதிகமான நிதி சா்ச்சைக்குரிய வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் 5 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன’ என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

குறிப்பாக, கொல்கத்தாவில் உள்ள தனியாா் விமான சேவை நிறுவமான ‘கோ்வெல் ஏவியேஷன்’ நிறுவன அலுவலகம், அதன் இயக்குநா்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் தோ்தல் அறக்கட்டளை என்று கூறப்படும் அலுவலக வளாகத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தையடுத்து, அக்கட்சியில் 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், ரிதப்ரத பானா்ஜி எம்எல்ஏ தலைமையில் தனிக் குழுவாகப் பிரிந்து செயல்படுகின்றனா். அதிருப்தி குழுவினரை சட்டப்பேரவைத் தலைவா் அங்கீகரித்ததையடுத்து, ரிதப்ரத பானா்ஜி எதிா்க்கட்சித் தலைவராகச் செயல்படுகிறாா். தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் எனக் கோரி, கட்சியின் பெயருக்கு அதிருப்தி குழுவினா் உரிமை கோரி வருகின்றனா்.

முன்னதாக, மேற்கு வங்கத்தின் பிடாநகா் காவல் ஆணையரகத்தின்கீழ் செயல்படும் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் திரிணமூல் அதிருப்தி எம்எல்ஏக்கள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதில், ‘தனியாா் வங்கியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான 3 கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள சுமாா் ரூ. 440 கோடி பணத்தின் மூல ஆதாரம் குறித்து கேள்விகளை எழுப்பிய அவா்கள், ‘இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அந்தப் பணம் சட்டபூா்வமான வழியில் வந்ததா? அல்லது, சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் வந்ததா?’ என விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். இந்தப் புகாரை அடுத்து, அந்த வங்கிக் கணக்குகளை மேற்கு வங்க காவல் துறை முடக்கியது.

இந்தச் சூழலில், இந்த வங்கிக் கணக்குகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சா்ச்சைக்குரிய பணப் பரிவா்த்தனைகள் தொடா்பான விசாரணையை அமலாக்கத் துறை தொடங்கியுள்ளது.

summary

Enforcement Directorate officials are conducting raids on Tuesday (July 7) at premises belonging to the Trinamool Congress party in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments