திரிணமூல் காங். கணக்கை முடக்க வேண்டும்! தனியார் வங்கிக்கு முன்னாள் பொருளாளர் கடிதம்!
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டுமென முன்னாள் பொருளாளர் அரூப் பிஸ்வாஸ் கடிதம்...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கக் கோரி அக்கட்சியின் முன்னாள் பொருளாளர் அரூப் பிஸ்வாஸ் தனியார் வங்கிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது முதல் அக்கட்சிக்குள் வெடித்து வரும் தொடர் கிளர்ச்சிகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் புதிய அணியாக உருவாகி அங்கீகாரம் கோரி வருகின்றனர். மேலும், இந்தப் புதிய அணியினர் ரிதபரதா பானர்ஜி என்பவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளை நிர்வாகிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது குறித்து நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குமாறு தனியார் வங்கிக்கு முன்னாள் பொருளாளர் அரூர் பிஸ்வாஸ் இன்று (ஜூன் 18) கடிதம் எழுதியுள்ளார்.
இதுபற்றி, அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“தற்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி அணியினர் தாங்களே கட்சியின் சட்டப்பூர்வமான பிரதிநிதிகள் என உரிமை கோருகின்றனர். இதனால், வங்கிக் கணக்குகளை நிர்வாகிக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.
கட்சியின் நிதிகளைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த விவகாரம் முறையாகத் தீர்க்கப்படும் வரை, வங்கிக் கணக்கு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையோ அல்லது செயல்பாட்டு அதிகார வரம்புகளில் மாற்றங்களையோ அனுமதிக்க வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகச் செயல்பட்டு வந்த மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் அரூர் பிஸ்வாஸ் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் டோல்லிகஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.
இதையடுத்து, பொருளாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு அந்தப் பதவிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சுபாஷிஸ் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Aroop Biswas, the former treasurer of the Trinamool Congress, has written to a private bank requesting that the party's bank account be frozen.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.