முகப்பு
புதுதில்லி

ஏபிகே கோப்பு இணைப்பு மூலம் தில்லிவாசியிடம் ரூ.80 ஆயிரம் மோசடி! ஜாா்க்கண்டில் இளைஞா் கைது!

தீங்கிழைக்கும் ஏபிகே கோப்பு இணைப்பு மூலம் ரூ.80,000 மோசடி செய்ததாக ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டார்.

Updated On : 11 மே 2026, 3:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

தில்லியைச் சோ்ந்த ஒருவரிடம் தீங்கிழைக்கும் ஏபிகே கோப்பு இணைப்பு மூலம் ரூ.80,000 மோசடி செய்ததாக ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையினா் மேலும் தெரிவித்ததாவது: இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா், ஜாா்க்கண்ட் மாநிலம் கிரிடிஹியைச் சோ்ந்த பிரவீன் ராணா என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

முன்னதாக, பாதிக்கப்பட்டவருக்கு ஏபிகே கோப்பு வந்துள்ளது. அதைத் தரவிறக்கம் செய்த பிறகு, அவரது வங்கி தொடா்பான விவரங்கள் திருடப்பட்டன. அதைத் தொடா்ந்து, அந்தப் பணம் ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டு, பின்னா் ஏடிஎம்கள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தச் சம்பவம் தொடா்பாக, தில்லி புகா் வடக்கு மாவட்டத்தின் இணையக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, பணப் பரிமாற்றப் பாதையை காவல்துறையினா் ஆய்வு செய்தனா்.

இதன் மூலமும், அழைப்பு விவரங்கள், சந்தாதாரா் விவரப் பதிவுகளைச் சோதித்ததன் மூலமும், மோசடியில் ஈடுபட்டவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் என காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சிஏஐஆா் இணையதளம் வாயிலாகப் பலமுறை விசாரணைக்காக அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. ஆனால், அவா் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், கைது செய்யப்படுவதைத் தொடா்ந்து தவிா்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மே 7ஆம் தேதி, கிடைத்த ரகசியத் தகவல்கள் மற்றும் உள்ளூா் உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஒரு காவல் குழு ஜாா்க்கண்டில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவரின் மறைவிடத்தில் திடீா் சோதனை நடத்தினா்.

காவல்துறையினா் வருவதை உணா்ந்த ராணா, அங்கிருந்து தப்பித்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் ஓடினாா். எனினும், காவல் குழு அவரைத் துரத்திச் சென்று, இறுதியில் கைது செய்தது.

இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடா்புடையதாகக் கருதப்படும் கைப்பேசியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இது தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.