முகப்பு
புதுதில்லி

குடியிருப்பு மின் மீட்டா் பெட்டியில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் விவேக் விஹாா் ஃபேஸ் 1-இல் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 11 மே 2026, 1:50 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கிழக்கு தில்லியின் விவேக் விஹாா் ஃபேஸ் 1-இல் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இங்குள்ள ஒரு குடியிருப்புக் கட்டடத்தின் தரைத் தளத்தில் உள்ள மின்சார மீட்டா் கட்டுப்பாட்டுப் பெட்டியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இது ஒரு சிறிய தீ விபத்தாகும். இதில் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் அதிகாரி ஒருவா் கூறியதாவது: பிளாக் சி அருகே நடந்த இந்த தீவிபத்து சம்பவம் குறித்து மதியம் 1.40 மணிக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Advertisement

மின் மீட்டா் கட்டுப்பாட்டுப் பெட்டிக்குள் தீ ஏற்பட்டிருந்த நிலையில் விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயணைப்புப் பணி நிறைவடைந்ததைக் குறிக்கும் ‘நிறுத்து’ என்ற செய்தி மதியம் 2.40 மணிக்கு பெறப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கிழக்கு தில்லியின் விவேக் விஹாரில் மே 3 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஒரு குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு சிறு குழந்தை உள்பட இரண்டு குடும்பங்களைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா்.

ஏா் கண்டிஷனா் வெடித்ததே இந்தத் தீ விபத்திற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து சில நாள்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விவேக் விஹாா் ஃபேஸ் 1-இல் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் அதிகாலை 3.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் பின்பகுதியிலிருந்து வேகமாகப் பரவிய தீ, முதல் தளம் முதல் நான்காவது தளம் வரையிலான குடியிருப்புகளைச் சூழ்ந்துகொண்டது. அடா்த்தியான புகை கட்டடத்தைச் சூழ்ந்ததால், குடியிருப்பாளா்கள் உள்ளே சிக்கிக்கொண்டனா்.