முகப்பு
புதுச்சேரி

ராமதாஸ் கைது எதிரொலி: 7 பஸ்கள் உடைப்பு, கடைகள் அடைப்பு

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் புதன்கிழமை 5 அரசு பஸ்கள் உள்பட 7 பஸ்கள் மர்மநபர்களால்

Updated On : 2 மே 2013, 12:10 pm IST
பகிர்:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் புதன்கிழமை 5 அரசு பஸ்கள் உள்பட 7 பஸ்கள் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டன.

மேலும்  பல இடங்களில் கடைகளும் அடைக்கப்பட்டன.

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

இதனைக் கண்டித்து, புதுச்சேரியை அடுத்த பூர்ணாங்குப்பம் கடலூர் - புதுச்சேரி சாலையில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன.

பஸ்கள் உடைப்பு:  அப்போது அந்த வழியாக சென்ற 4 பஸ்கள், 2 வேன்கள் ஆகியவற்றின்  கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இது குறித்து தகவலறிந்த தவளக்குப்பம் போலீஸார் அங்கு விரைந்து, மறியலில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர்.

இதேபோல, திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோயில், பிள்ளைச்சாவடி பகுதிகளிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே கிருமாம்பாக்கத்தை அடுத்த முள்ளோடை பகுதியில் 3 பஸ்களின் கண்ணாடிகளும் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டன. சேதப்படுத்தப்பட்ட 7 பஸ்களில், 5 அரசு பஸ்கள் ஆகும்.

மரங்கள் சாய்ப்பு: திருக்கனூரை அடுத்த சுத்துக்கேணியிலிருந்து சந்தை புதுக்குப்பம் செல்லும் சாலையின் குறுக்கே பனைமரங்களை வெட்டிப்போட்டு, மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

வில்லியனூரில் தொகுதி பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டதால், வில்லியனூர் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.