முகப்பு
புதுச்சேரி

காரைக்காலில் போராட்டக்காரர்கள், போலீஸாரிடையே தள்ளுமுள்ளு: பேருந்து கண்ணாடி உடைப்பு

காரைக்காலில் காவல்துறை அனுமதியின்றி புதன்கிழமை போராட்டம் நடத்த முயன்ற இஸ்லாமிய அமைப்பினருக்கும்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:25 am IST
பகிர்:

காரைக்காலில் காவல்துறை அனுமதியின்றி புதன்கிழமை போராட்டம் நடத்த முயன்ற இஸ்லாமிய அமைப்பினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு சுதந்திர தின விழா நடத்த தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததைக் கண்டித்து, காரைக்காலில் கடந்த 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்து பல்வேறு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

இவர்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் போட்டுள்ளதாக, காவல்துறையை கண்டித்து இந்த அமைப்பினர் மாவட்ட ஆட்சியரகம் அருகே புதன்கிழமை  போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். இதற்கும் காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டம் நடத்த முன்வரலாமென நினைத்த போலீஸார், குறிப்பிட்ட இடத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸாரும், ரிசர்வ் பெட்டாலியன் பிரிவினரும் குவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

மாலை 5.30 மணி அளவில் போராட்டம் நடத்த மாதாகோவில் வீதி வழியே வந்த அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேரை போலீஸார் வழிமறித்து கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பாரதியார் சாலையில் திடீரென பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 100 பேர் காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு வந்தனர். திடீரென கூட்டத்தினர் ஒரு இடத்தில் நின்று காவல்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகக் கூறி போலீஸார், அவர்களை கைது செய்து கல்லூரிப் பேருந்து ஒன்றில் ஏற்றினர்.

பேருந்தில் ஏற மறுத்தவர்களை போலீஸார் இழுத்துச் சென்று ஏற்றினர். அப்போது,  போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேருந்து புறப்படும் நேரத்தில், உள்ளே இருந்தவர்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர். இச்சம்பவத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என இருவருக்கு கண்ணாடி குத்தி காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களை போலீஸார் கலைந்து செல்லும்படி கூறினர். ஏற்க மறுத்து நின்றிருந்தவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.