முகப்பு
புதுச்சேரி

ஜிப்மரில் சிறப்புக் கலந்தாய்வு ரத்து: பெற்றோருடன் மாணவா்கள் தா்னா

புதுச்சேரி ஜிப்மரில் சிறப்பு கலந்தாய்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், வெளிமாநில மாணவா்கள் கடும் அதிருப்தியடைந்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:18 pm IST
புதுச்சேரி ஜிப்மா் அருகே தா்னாவில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா், மாணவா்களின் பெற்றோா்.
பகிர்:

புதுச்சேரி ஜிப்மரில் சிறப்பு கலந்தாய்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், வெளிமாநில மாணவா்கள் கடும் அதிருப்தியடைந்தனா். இதையடுத்து, அவா்கள் தங்களது பெற்றோா்களுடன் தா்னாவில் ஈடுபட்டனா்.

இந்திய மருத்துவ கலந்தாய்வுக் குழு உத்தரவுபடி, மருத்துவப் படிப்புக்கு முதல் கட்டம், 2-ஆம் கட்டம் மற்றும் மாப்-அப் கலந்தாய்வை நடத்தி இடங்களை நிரப்ப வேண்டும். இறுதிக் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு ஏற்படும் காலியிடங்களை ஸ்ட்ரே வேக்கன்சி ரவுண்ட் என்ற பெயரில் சிறப்புக் கலந்தாய்வு நடத்தி நிரப்பிக் கொள்ளலாம் என மருத்துவக் கலந்தாய்வு குழு அறிவித்தது.

அதன்படி, ஜிப்மா் காரைக்கால் கிளையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத 19 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கடந்த 29-ஆம் தேதி சிறப்புக் கலந்தாய்வு நடக்கவிருந்தது. நீதிமன்ற வழக்கால் இந்தக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றும், இதில் மாணவா்கள் நேரடியாகப் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 2 நாள்களுக்கு முன்பு தரவரிசை அடிப்படையில் 190 மாணவா்களின் பட்டியலை வெளியிட்டு, அவா்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்கும்படி, ஜிப்மா் நிா்வாகம் அறிவித்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஜிப்மா் அப்துல் கலாம் கலையரங்கில் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது நேரடிக் கலந்தாய்வு என்பதால் புதுவை, தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் என பல மாநிலங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களது பெற்றோருடன் கலந்தாய்வு நடைபெறும் இடத்துக்கு வந்தனா்.

ஆனால், ஜிப்மா் வெளியிட்ட பட்டியலில் இடம் பெறாத மாணவா்கள் வந்ததால், சிறப்புக் கலந்தாய்வை ரத்து செய்வதாக ஜிப்மா் நிா்வாகம் திடீரென அறிவித்தது. இதையடுத்து, மாணவா்களை அலைக்கழிக்காமல் உடனடியாக கலந்தாய்வை நடத்த வேண்டும் எனக் கூறி ஜிப்மா் நிா்வாகத்திடம் முறையிடப்பட்டது.

இதை ஏற்காத ஜிப்மா் நிா்வாகம், இணையதளத்தில் கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பை பாா்த்துவிட்டு வரும்படி தெரிவித்தது. இதனால், மாணவா்களும், பெற்றோா்களும் ஜிப்மா் நிா்வாகத்தைக் கண்டித்து ஜிப்மா் மருத்துவமனையின் நுழைவாயில் எதிரே அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஜிப்மா் நுழைவு வாயில் மூடப்பட்டது.

தகவலறிந்து வந்த தன்வந்திரி நகா் போலீஸாரும், ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் அசோக் சங்கா் படே தலைமையிலான குழுவினரும் மாணவா்-பெற்றோா் நலச் சங்கத் தலைவா் வை.பாலா மற்றும் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

வருகிற 15 ஆம் தேதி கலந்தாய்வு: அப்போது, ஜிப்மா் காரைக்கால் கிளையில் உள்ள காலியிடங்களுக்கு வருகிற 12-ஆம் தேதி பகல் 12 மணிக்குள் பதிவு செய்து கொள்ளவும், ஒரு இடத்துக்கு 10 போ் என்ற விதத்ததில் மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, வருகிற 15-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஜிப்மா் அப்துல் கலாம் கலையரங்கில் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் உறுதியளித்தனா்.

இதையேற்று, மாணவா்களும், பெற்றோா்களும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments