முகப்பு
ஆன்மிகம்

தொடங்கியது புரி ஜகந்நாதர் ரத யாத்திரை

உலகப் புகழ்பெற்ற ஜகந்நாதர் ரத யாத்திரை திருவிழா புரியில் புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 11 ஜூலை 2013, 11:18 pm IST
பகிர்:

உலகப் புகழ்பெற்ற ஜகந்நாதர் ரத யாத்திரை திருவிழா புரியில் புதன்கிழமை தொடங்கியது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழைமையான இத்தேர்த் திருவிழா இந்த ஆண்டும் வழக்கம்போல் பக்தர்களின் ஆரவாரத்துடன் வண்ண மையமாக காலையில் தொடங்கியது. இந்த ரத யாத்திரையில் சுமார் 7 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு வீதி உலா வந்தனர்.

பாத தந்தா புனித ஸ்தலத்தில் நிறுத்தப்பட்டிருந்த கம்பீரமான, வண்ணமயமான மூன்று தேர்களை இழுப்பதற்கும் ரத யாத்திரையைக் காணவும் காலையில் இருந்தே புரியில் பக்தர்கள் குவியத் தொடங்கினர்.

Advertisement

Advertisement

அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்கும்பொருட்டு பாதுகாப்புப் படையினர் முழுஅளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பிரபஞ்சத்தைக் காக்கும் தெய்வங்களான ஜகந்நாதர், அவரது மூத்த சகோதரர் பாலபத்ரர், அவர்களது சகோதரி சுபத்ரா தேவி ஆகியோரை கருவறையில் இருந்து தேரில் அமர வைக்க அழைத்து வந்தபோது, மங்கள ஆரத்தி, மைலம் உள்ளிட்ட சிறப்பு சடங்குகள் நடந்தன.

ரத்ன சிங்காசனத்தில் இருந்து மூன்று தெய்வங்களும் 22 படிகள் வழியாக கீழே வந்து சிங்கதுவாரம் வழியாக கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில் அமர்வார்கள் என்பது ஐதீகம். தெய்வங்களை தேருக்கு அழைத்துவரும் இந்தப் புனிதச் சடங்குக்கு பஹண்டி என்று பெயர். இந்த சடங்கு காலையில் ஒரு மணி நேரம் தாமதமாக 10 மணிக்குத் தொடங்கியது.

அவ்வாறு அழைத்து வரப்பட்ட கடவுளர்களைத் தொட்டு தரிசிப்பதற்கு பக்தர்களும் சேவார்த்திகளும் அலை மோதினர். சங்கொலி, தாளத்துக்கு ஏற்ப கடவுளர்கள் ஆடி ஆடி தேருக்குó வந்தனர்.

கடவுளர் கிருஷ்ணரின் சுதர்ஷன சக்கரம் எடுத்து வரப்பட்டு முதலாவதாக சுபத்ரா தேவியின் தேரிலும் அதையடுத்து பாலபத்ரர், கடைசியாக ஜகந்நாதரின் தேர்களிலும் வைக்கப்பட்டது. பிறகு மூன்று கடவுளர்களும் அவர்களுக்கான தேர்களில் வைக்கப்பட்டனர்.

ஜகந்நாதரின் அத்தையான குண்டிசா தேவியின் கோயிலுக்கு 9 நாள் பயணமாக புறப்படவிருக்கும் கடவுளர்களை அழைத்துச் செல்லும் பொருட்டு மரத்தால் செய்யப்பட்ட மூன்று பிரமாண்ட தேர்கள் சிகப்பு, கறுப்பு, பச்சை, மஞ்சள் நிறத்தாலான துணிகளால் போர்த்தப்பட்டு தயாராக நின்று கொணடிருந்தன.

45 அடி உயரம்: 16 பெரிய மரச் சக்கரங்களாலான ஜகந்நாதர் தேரின் உயரம் 45 அடி உயரமாகும். 14 சக்கரங்களைக் கொண்ட பாலபத்ரரின் தேர் 44 அடியும் 12 சக்கரங்களுடன் கூடிய சுபத்ரா தேவியின் தேர் 43 அடி உயரமும் கொண்டது.

ஜகந்நாதர் கோயில் சிங்கதுவாரத்தில் இருந்து குண்டிசா கோயில் வரை செல்லும் 3 கிமீ தூரமுள்ள கிராண்ட் சாலையின் இரு புறமும் மக்கள் வெள்ளம் அலை மோதியது.

முதலில் மாலை 3.15 மணிக்கு பாலபத்ரரின் தேரும் பிறகு அரை மணி நேரம் கழித்து சுபத்ராவின் தேரும் கடைசியாக ஜகந்நாதரின் தேர் 4.20 மணிக்கும் கிராண்ட் சாலை வழியாகப் புறப்பட்டுச் சென்றன. சுபத்ரா தேவியின் தேர் தடம் மாறிச் சென்றதால் ஜகந்நாதரின் தேரின் புறப்பாடு சற்று தாமதமடைந்தது.

சூரியன் மறைந்து இருள் சூழவே, தேர்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. வியாழக்கிழமை காலை தேர்கள் மீண்டும் புறப்பட்டு அத்தை குண்டிசா தேவியின் கோயிலைச் சென்றடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.