முகப்பு
செய்திகள்

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?

வயிற்றில் கிருமித் தொற்று, ஃபுட் பாய்சன் பாதிப்பு மற்றும் அவற்றுக்கு இடையேயுள்ள வித்தியாசம் பற்றி...

Updated On : 16 ஜூன் 2026, 11:00 am IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

- உண்ணிகிருஷ்ணன். எஸ்

உணவில் தேவையற்ற, தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ரசாயனங்கள், வேறு பொருள்கள் கலந்து அது சாப்பிடுவதற்கு பாதுகாப்பற்றதாக இருப்பதையே உணவுக் கலப்படம் (Food contamination) என்று கூறுகிறார்கள்.

இதில் சாதாரண வயிற்றுக் கிருமித் தொற்று அல்லது உணவு நஞ்சாதல் (Food poisoing) ஏற்படலாம். அறிகுறிகளின் மூலமாக இவற்றிக்கு இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வது மிக முக்கியமானது. அப்படியென்றால் மட்டுமே சரியான மருத்துவ சிகிச்சையை அளிக்க முடியும்.

Advertisement

Advertisement

கேரள மாநிலம் மலப்புரம் எம்.இ.எஸ். மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் புருஷோத்தமன் குழிக்கத்துகண்டியில், வயிறு தொற்று தொடர்பான அறிகுறிகள், அபாயம், பாதுகாப்பு வழிமுறைகளை விளக்குகிறார்.

சாதாரண வயிற்றுக் கிருமித் தொற்றுக்கும் உணவு நஞ்சாவதற்கும் (food poisoning) உள்ள வேறுபாடு என்ன?

இரண்டுமே வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தியை ஏற்படுத்தினாலும் உணவு நஞ்சாவது என்பது எப்போதும் குடல் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருப்பதில்லை. இது அதிக பலவீனம் அல்லது கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற நரம்பியல் அறிகுறிகளையும் கொண்டிருக்கும். அறிகுறிகள் அனைத்தையும் கவனிப்பது அவசியம். குறிப்பாக ஒரே உணவைச் சாப்பிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் அது உணவுக் கலப்படமாக அல்லது உணவு நஞ்சானதாக இருக்கலாம்.

இது எப்போது அவசரநிலையாகும்? முக்கியமான அபாய அறிகுறிகள் என்னென்ன?

ஷிகெல்லோசிஸ் போன்ற கடுமையான தொற்றுகள் ரத்த ஓட்டக் குறைபாடு, நரம்பியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கடுமையான நீரிழப்பு, அதீத சோர்வு, சிறுநீர் வெளியேற்றம் குறைதல், உணவு சாப்பிடுவதில் சிரமம், கடுமையான வயிற்று வலி, இதயப் பிரச்னைகள், வலிப்பு, சுயநினைவு இழப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும். தற்போது தொற்றுகள் மோசமடைந்து வருவதால் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரை இன்றி கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வது ஏன் ஆபத்தானது?

அறிகுறிகளைச் சரிசெய்வதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது நோய்களின் தன்மையைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது நேரத்தையும் வீணடிக்கிறது. நீங்கள் கடைகளில் வாங்கும் மாத்திரை, மருந்துகள் அந்த நேரத்திற்கு உங்களுடைய அறிகுறிகளைக் குறைக்குமே தவிர முழு தீர்வாக இருக்காது, மாறாக உங்களுடைய தொற்றுக்கு முரணாக இருந்தால் தீங்கு விளைவிக்கும்.

கலப்படமான உணவை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

இல்லை. ஒரு கலப்படமான அல்லது நஞ்சான உணவை மீண்டும் சூடுபடுத்துவது ஏற்கெனவே அதில் இருக்கும் நச்சுகளை செயலிழக்கச் செய்யாது. உணவில் நஞ்சு கலக்கும்போது அது சில மணி நேரங்களில் பல மடங்கு பெருகுகிறது.

சமைக்கும்போது கையில் புண் இருந்தால், ஸ்டேஃபிளோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்கள் உணவில் கலந்தால், அது உணவு தயாரிக்கும்போதே அதில் சேர்ந்துவிடும். அதேபோல பிரிட்ஜில் வைத்து குளிரூட்டினாலும் நுண்ணுயிரிகள் அழியாது. மாறாக, அவற்றின் வளர்ச்சி மெதுவாக நடைபெறும். சரியான முறையில் உணவைப் பக்குவப்படுத்தாவிட்டால் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் உணவுகளுக்குப் பரவும். இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உணவு மூலம் பரவும் நோய்களில் நீண்டகால சிக்கல்கள் உண்டா?

பெரும்பாலான பாதிப்புகள் நீடித்த பிரச்னைகள் இன்றி குணமாகிவிடும். ஆனால், குறிப்பிட்ட நச்சுக்கள் நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். உதாரணமாக, அசுத்தமான பயிர்களில் இருந்து வரும் அஃப்லாடாக்சின்(aflatoxins), நீண்ட காலம் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரம் நச்சுத்தன்மையுள்ள பயறு வகைகளால் ஏற்படும் லத்திரிசம் (lathyrism) போன்ற நிலைகள், நரம்பியல் பிரச்னைகள், பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். நீண்டகால ஆபத்து என்பது குறிப்பிட்ட நோய்க் கிருமி மற்றும் நோயின் தீவிரத்தைப் பொறுத்தது.

தமிழில்: எம். முத்துமாரி

summary

Learn the key differences between food poisoning and stomach infections, warning signs, dehydration risks, treatment mistakes, and food safety precautions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.