காஞ்சிபுரம் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது காஞ்சிப் பட்டும், வரலாற்றுச் சிறப்பும் பழைமையும் மிக்க கோயில்கள் நிறைந்த நகரம் என்பதாகத்தான் இருக்கும்.
சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் காஞ்சிபுரத்தில் கோயில்கள் நிரம்பியிருக்கின்றன. இங்கு சைவ சமயத்தின் இறைவனான சிவபெருமானும், வைணவ மதத்தின் இறைவனான திருமாலும் அருள்புரியும் சைவத் திருக்கோயில்களும், வைணவத் திருக்கோயில்களும் ஏராளமாக உள்ளன.
வைணவத் திருக்கோயில்கள் உள்ள பகுதியை விஷ்ணு காஞ்சி என்றும், சிவாலயங்கள் அதிகமாக உள்ள பகுதி சிவ காஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. இதே காஞ்சி மாநகரில்தான் சூரிய பகவானின் மகனும் எமதர்மனின் உதவியாளருமான சித்திர குப்தனுக்கு கோயில் அமைந்துள்ளது, தென் தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு.
திருக்கோயிலின் வரலாறு
எமதர்மன் ஒரு முறை கயிலாயத்தில் சிவபெருமானைச் சந்தித்து பிரம்ம தேவனால் படைக்கப்படும் உயிர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டுத் தண்டனை வழங்குவதில் சற்று சிரமமாக இருப்பதாகவும், அதற்காக எனக்கு ஓர் உதவியாளர் தேவை என்றும் விண்ணப்பித்தார்.
சிவபெருமானும் பிரம்மாவை வரவழைத்து எமதர்மனின் கோரிக்கையை உடனே நிறைவேற்றி வைக்குமாறு கட்டளையிட்டார். ஒரு நாள் சூரிய தேவன் ஆகாய மார்க்கமாக தன் பயணத்தைத் தொடங்கியபோது சூரியனின் ஒளிக்கதிர்கள் நீரில் விழுந்து பல வண்ண ஜாலங்களை எழுப்பின. அப்போது கடலின் நிலப்பரப்பில் நீலாதேவி என்னும் பெண் தோன்றி, சூரியனின் மீது ஆசைப்பட்டு ஆனந்தத்துடன் சூரிய பகவானைத் தழுவினாள். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் நீலாதேவி கடல் பரப்பினுள் மறைந்தாள்.
அந்தக் குழந்தை பிறந்த நேரம் சித்திரை மாதம் பௌர்ணமி (சித்ரா பௌர்ணமி) நாளாகும். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய அக்குழந்தையே சித்திரகுப்தர் ஆவார். இவர் பிறக்கும்போதே மிக அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகளுடனும், வலக்கையில் எழுத்தாணியோடும் பிறந்தார். இமயமலைச் சாரலில் கடும் தவங்கள் புரிந்து பல சக்திகளைப் பெற்றார். பிறகு தந்தை சூரிய பகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராகப் பணியாற்றுகிறார் என்பது வரலாறு. சித்ரா பௌர்ணமித் திருவிழா இக்கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவிலேயே சித்திரகுப்தருக்கு உள்ள ஒரே திருக்கோயில் என்ற பெருமையைப் பெற்ற கோயிலாகும். நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதி தேவதையாக சித்திரகுப்தர் விளங்குகிறார். யார், யார் மோட்சத்துக்குச் செல்வார்கள் என்று உயிர்களின் கணக்குகளைக் கையில் தயாராக வைத்துக் கொண்டிருப்பவர் இந்த சித்திரகுப்தர். மிகச்சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது இக்கோயில்.
இக்கோயில் மூலவராக சித்திரகுப்தர், அம்பாள் திருப்பெயர் கர்ணகி அம்பிகை. இக்கோயிலில் செல்வ விநாயகர், ராமலிங்க அடிகள், ஐயப்பன், விஷ்ணு துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சித்திரகுப்தர் (கேது) பரிகாரத் தலம் பற்றி தினமணி வெள்ளிமணியில் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் என்ன சொல்லியிருக்கிறார்?
பாற்கடலைக் கடைந்து அமுதம் கிடைத்தபோது கள்ளத்தனமாய் அதில் ஒரு துளியை விழுங்கிய ராகுவை, மோகினியாக அவதாரம் எடுத்த எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் துண்டித்தபோது சரீரப் பகுதி கேதுவாக மாறியது.
மகாவிஷ்ணுவை சரணடைந்து நவக்கிரகப் பதவி பெற்றார் கேது. சிவபக்தியிலும் அளவற்ற ஈடுபாடு கொண்ட கேதுவை "மோட்ச காரகன்" என ஜோதிடக் கலை போற்றி வணங்குகிறது.
எவரது ஜாதகத்தில் கேது சுபமாகவும், பலம் பெற்றும் இருக்கிறாரோ அவர்களுக்கு ஆன்மிகத்தில் அளவற்ற ஈடுபாடும். உலக பந்தபாசங்களில் குறைந்த நாட்டமும், பக்தி நெறிகளில் ஆழ்ந்த ஈடுபாடும் இருக்கும் என நமது பண்டைய ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன.
பாப விமோசனத்தை அளிக்கும் கேது, பாவத்தில் மனம் ஈடுபடாமல், சதா இறை பக்தியிலேயே மனத்தை ஈடுபடச் செய்வார். மனத்தில் வைராக்கியம், உலக சுகங்களில் நாட்டமின்மை ஆகிய குணங்களை இயற்கைச் சுபாவமாகவே அளித்து அருளும் தெய்வீகச் சக்தி வாய்ந்தவர் கேது.
தூய நெஞ்ச தவயோகியர் ஜாதகங்களை ஆராய்ந்தால், அவற்றில் கேதுவின் பலம் வாய்ந்த ஆதிக்கம் இருப்பதைக் காணலாம்.
முற்பிறவிகளில் அளவற்ற புண்ணிய காரியங்களைச் செய்து, சந்தர்ப்பச் சூழ்நிலைகளினால் சில தவறுகள் செய்துள்ளவர்கள் மறுபிறவியில் அச்சிறு பாபங்களுக்காகக் கர்ப்ப வாசமும், பிறந்த பிறகு சில இன்னல்களையும் அனுபவித்து, உலக வாழ்வில் இருந்தும் ஆத்மஞானியாகத் தூய மனதுடன் வாழ்ந்து, இறுதியில் இறைவனுடன் ஐக்கியமாகி முக்தி நிலையை அடைந்து விடுகின்றனர். அத்தகைய ஆத்மஞானிகள் யார் என்பதை ஜாதகத்தின் லக்கினம், பூர்வ புண்ணியம், 12-ம் இடம் மற்றும் கேதுவின் நிலை ஆகியவற்றைக் கொண்டு மிகமிகத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
வெளிப் பார்வைக்கு மூடன் போன்றும், பைத்தியக்காரன் போன்றும், அருவருக்கத்தக்கத் தோற்றம் கொண்டும் உள்ளே இருப்பது ஒரு மகாபுருஷரின் ஆத்மா என்பதை அறிந்துகொள்வதற்கு ஜோதிடம் என்ற ஒப்புயர்வற்ற கலை கேதுவின் மூலம் நமக்கு உணர்த்துகிறது.
ஆதலால் எவரையும் அவரது வெளித் தோற்றத்தை வைத்து அவர் யார், அவர் எப்படிப்பட்டவர், அவரது பிறப்பின் ரகசியம் என்ன என்பனவற்றை அறிந்துகொள்ள இயலாது என கௌடில்யரின் "அர்த்த சாஸ்திரம்" விளக்கியுள்ளது.
இவ்விதம், மனிதப் பிறவியின் உண்மையான தத்துவத்தையும், காரணத்தையும் எளிதில் அறிந்துகொள்ள உதவும் இந்த அரிய சாயாகிரகம் "மகா கேது" என நமது சாஸ்திரங்களில் புகழ்ந்து போற்றப்படுகிறது.
புதன், சுக்கிரன், சனி ஆகிய மூன்றும் கேதுவிற்கு நட்புக் கிரகங்களாகும். குரு, சூரியன், சந்திரன் ஆகிய மூவரும் பகை கிரகங்கள் ஆவர். எவர் ஜாதகத்தில் கேதுவினால் தோஷம் ஏற்பட்டுள்ளதோ, அவர்களுக்குக் கடுமையான சரும ரோகங்கள், பில்லி, சூனியம் ஆகியவற்றினால் துன்பங்கள், ஒழுக்கமற்ற பெண்களுடன் சேர்க்கை ஆகியவை ஏற்படும். இத்தகைய தெய்வீகப் பெருமை வாய்ந்த கேதுவின் அதிதேவதை தர்மராஜரின் கணக்கெழுத்தரான சித்திரகுப்தரே.
பிரத்யதி தேவதை படைப்புக் கடவுளான பிரம்மா ஆவார். சித்திரகுப்தருக்கு அற்புதமான கோயில் ஒன்று காஞ்சி மாநகரில் உள்ளது. பிரம்மாவிற்கு உலகில் உள்ள ஒரே கோயில் ராஜஸ்தானிலுள்ள புஷ்கரம் என்ற திவ்யத் திருத்தலத்தில் உள்ளது. காஞ்சியில் உள்ள சித்திர குப்தர் கோயிலும், சூரியனார் கோயிலும் கேது பரிகாரத் திருத்தலங்களாகும்.
மனம் நெகிழ்ந்த, உண்மையான பக்திக்குக் கட்டுப்படுபவர் கேது. அத்தகைய கேதுவை வணங்கிப் பிறவிப் பெரும் பயனை அடைவோம். (மீள்பிரசுரம்)
பரிகாரம்
கேது பகவானுக்காகக் கொள்ளும், ராகு பகவானுக்காக உளுந்தும் சித்திர வண்ணத்துணியில் தட்டில் வைத்து பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து துணியை மட்டும் ஆலயத்தில் சமர்ப்பித்துவிட்டு கொள்ளையும், உளுந்தையும் பசுவிற்குத் தந்து விடலாம். இதனால் ராகு-கேது தோஷம் நீங்குவதாக ஐதீகம்.
சித்திர குப்தரின் ஒரு கையில் எழுத்தாணியும், மற்றொரு கையில் ஓலைச்சுவடிகளும் இருப்பதால் இக்கோயிலில் சிறுவர்கள் நன்றாகப் படிக்க நோட்டு, பேனாவை கொடுத்து நல்ல முறையில் படிக்க வேண்டும் என்பதற்காகப் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து அந்த நோட்டையும், பேனாவையும் திரும்ப வாங்கிச் செல்கின்றனர். வணிகர்களும் விற்பனை நல்ல முறையில் இருக்க இதே முறையைப் பின்பற்றுவதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
திருக்கோயில் அமைவிடம்
காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகிலேயே நெல்லுக்காகத் தெருவின் மையத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சித்திரகுப்தர் திருக்கோயில்.
கோயிலுக்குச் செல்வது எப்படி?
சித்திரகுப்தர் கோயிலில் இருந்து 63 கி.மீ. தொலைவில் சென்னை விமான நிலையம் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் ரயில் நிலையம் சித்திரகுப்தர் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்பதி-புதுச்சேரி, மதுரை-மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணம், செங்கல்பட்டு ரயில்கள் காஞ்சிபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சித்திரகுப்தர் கோயிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்தில் நடந்தே வந்து விடக்கூடிய தூரத்தில் மிக அருகில் அமைந்துள்ளது.
சென்னை, வேலூர் மற்றும் பெங்களூரில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு ஏராளமான பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.