முகப்பு
செய்திகள்

ஹீமோபிலியா நோய்க்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு! 

ஏப்ரல் 17-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச உலக ரத்தம் உறையாமை நோய் எனப்படும் ஹீமோபிலியா எனும் நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 3:34 pm IST
பகிர்:

ஏப்ரல் 17-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச உலக ரத்தம் உறையாமை நோய் எனப்படும் ஹீமோபிலியா எனும் நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஹீமோபிலியா

ஹீமோபிலியா ரத்தத்தில் உறையும் தன்மை குறைபாட்டினால் வரும் ஒரு பரம்பரை குறைபாடு. இது இரத்தம் எளிதில் உறையாத அரிதான ஒரு நோய். ஒருவருக்கு ஹீமோபிலியா இருந்தால், காலில் ஒரு ஆணி குத்தினால் சுவற்றில் இடித்துக் கொண்டால், காயத்தில் இரத்தம் நிற்காமல் வந்துகொண்டே இருக்கும். அடிபட்ட இடத்தில், 5 முதல் 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைவது என்பது இயற்கை. ஹீமோபிலியா இருந்தால், ரத்தம் உறையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும். ஹீமோபிலியா அதாவது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் மூலமாக வருகிறது. ஹீமோபிலியா உள்ள மனிதர்களுக்கு இரத்தம் உறையும் திறன் குறைவாக இருக்கும். அல்லது உறையவே உறையாது. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறு காயங்களினாலோ, அடிபடுவதனாலோ அல்லது தானாகவோ தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படும். ஹீமோபிலியாவை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் முறையான சிகிச்சையினால் கட்டுப்படுத்த முடியும்.

Advertisement

Advertisement

இது பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கும். காரணம், ரத்த உறைவுக் காரணி VIII (8) மற்றும் IX (9)ஐ உற்பத்திசெய்யும் மரபணுக்கள், எக்ஸ் குரோமோசோமில் உள்ளது. எக்ஸ் குரோமோசோம் என்பது ஆணுக்கான குரோமோசோம். இந்த எக்ஸ் குரோமோசோமில் ஃபேக்டர் 8 அல்லது 9-ஐ உற்பத்தி செய்யும் மரபணு இல்லாதிருந்தால், அவர்களுக்கு ஹீமோபிலியா பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களில், மரபணுக் குறைபாடுடைய ஒரு எக்ஸ் குரோமோசோம் இருந்தாலும், மற்றொரு எக்ஸ் குரோமோசோம் இயல்பான உற்பத்திகளைச் செய்வதால், ஹீமோபிலியா பாதிப்பு ஏற்படுவது இல்லை. எனினும், அடுத்தத் தலைமுறைக்கு மரபணுக் குறைபாடுடைய எக்ஸ் குரோமோசோமைக் கடத்துவதால், அவர்களை நோய் கடத்தி என்று அழைக்கிறோம்.

எப்படிக் கண்டறிவது? 

சில குழந்தைகள் தவழும்போதோ அல்லது நடக்க ஆரம்பிக்கும்போதோ, கை, கால் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நீல நிறத் தழும்புகள் தென்படலாம். பல் விழுந்து முளைக்கும் நேரங்களிலோ அல்லது பல்லைப் பிடுங்க நேரிடும்போதோ, ஈறுகளில் தொடர்ந்து ரத்தக் கசிவு ஏற்படுவது இதற்கான அறிகுறி. தடுப்பூசி போடும்போது வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகலாம். இப்படி ஏதாவது ஓர் அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக ஹீமோபிலியா இருக்கிறதா என்று பரிசோதிப்பது மிகவும் அவசியம்.

அறிகுறிகள்

மூட்டுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். அடுத்தடுத்து ஏற்படும் ரத்தக் கசிவு, மூட்டுகளின் உராய்வு இயக்கத்துக்குத் தேவையான திரவத்தை உற்பத்திசெய்யும் சவ்வுகளில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் மூட்டுகளில் வீக்கமும் செயலற்ற தன்மையும் ஏற்படும். தசைகளில் ரத்தக் கசிவு தானாகவும் அல்லது அடிபடுவதாலும் ஏற்படலாம். இவை பல நாட்கள் தொடர்ந்து இருந்தால், தசைகளில் அழுத்தம் உண்டாக்கி, நரம்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிப்படையும். சிறுநீர், மலத்திலும் ரத்தக்கசிவு தென்படலாம். மூளையில் ரத்தக்கசிவு தானாகவோ, அடிபடுவதாலோ ஏற்படலாம். இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் கூடும்.

‘ரத்தக் கசிவு ஏற்பட்டால், குறைபாடுடைய காரணிகளை நிவர்த்தி செய்வதுதான் சரியான சிகிச்சை. காரணிகள் இல்லாத நேரத்தில், புதிய முழுமையான ரத்தம், புதிய உறைந்த நிணநீர், கிரையோ போன்றவற்றைப் பயன்படுத்தலாம். 

‘நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்யக் கூடாது. வழிவழியாக வரும் பல மரபு நோய்களில் ஹீமோபிலியா முக்கியமானது என்பதால், நெருங்கிய உறவுகளுக்கு இடையேயான திருமணத்தைத் தடுக்க வேண்டும். அதேபோல் ஹீமோபிலியா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பெண் கருவுற்றால், 11-14 வாரங்களில் பிரத்யேகப் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஹீமோபிலியாவிற்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு

ஜோதிடத்தில் ரத்தம் மற்றும் ரத்த சம்மந்த பிரச்னைகளுக்கு கூறப்படுபவர் இன்றைய தின நாயன் அதாங்க! மங்களன் எனப்படும் செவ்வாய் தாங்க! ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனும் செவ்வாய்தான் என்கிறது மருத்துவ ஜோதிடம் என்றாலும் ஹீமோபிலியோ நோயிற்கு செவ்வாய் மட்டுமே காரணம் என சொல்லிவிட முடியாது.

ஹீமோபிலியா நோய் ரத்தம் உறையும் குறைபாட்டு நோயாகும். ஜோதிடத்தில் உறையும் தன்மையை குறிப்பவர் சனைஸ்வர பகவான் ஆவார். பனிக்கட்டி, குளிர்சாதனப் பெட்டி போன்ற அனைத்து விஷயங்களிலும் உறையும் தன்மையை ஏற்படுத்துபவர் சனைச்சர பகவான் ஆவார். எனவே ரத்தம் உறையும் தன்மைக்கும் சனைச்சரனே காரகர் ஆவார்.

மேலும் ஹீமோபிலியா நோய் மரபுணு சார்ந்த பாரம்பரிய நோயாகும். எனவே குரு பகவானும் ஒரு முக்கிய காரணமாகும். நாடி ஜோதிடத்தில் குருவை ஜீவ காரகன் எனப் போற்றுகின்றது. குருவின் மூலதிரிகோண வீட்டையே ஜீவன் உருவாகும் இடமாகக் கூறுகின்றது. எனவே மரபணு மற்றும் பாரம்பரியத்தை பொருத்தவரை குரு, செவ்வாய், சூரியன் ஆகிய மூவருமே தொடர்புள்ள கிரகங்களாக அமைகின்றனர்.

ஹீமோபிலியா உட்பட அனைத்து ரத்த நோய்களுக்கும் காரண பாவம் 

கால புருஷ பதினோராம் வீடான  கும்பம் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். எனவே கும்பத்தோடு ஜனன ஜாதக பதினோராம் வீடு, 1-5-9 ஆகிய திரிகோண வீடுகளின் நிலைகளும் தொடர்புடைய பாவங்களாகும்.

ஹீமோபிலியா நோய் ஏற்படும் ஜாதக அமைப்பு:

1.  செவ்வாயும், சனியும் அசுப சேர்க்கை பெறுவது.

2. செவ்வாயும், சனியும் கும்பத்திலோ, ஜெனன ஜாதக பதினோராம் வீட்டிலோ சேர்க்கை பெற்று நிற்பது.

3. செவ்வாயும் சனியும் வக்ரம், நீசம் பெற்ற நிலைகளில் பார்வை, சேர்க்கை, பெற்று நிற்பது.

4. செவ்வாய் சனி இருவரும் ஸ்ர்ப கிரகங்களின் இணைவில் நிற்பது.

5. செவ்வாயும் சனியும் ஆறு எட்டு அதிபதிகளாகி சேர்க்கை பெறுவது

6.  மேற்கண்ட அமைப்புடன் குரு வக்ரம், நீசம், அசுப சேர்க்கை பெறுவது.

7. ஜெனன ஜாதக 1-5-9 அதிபதிகள் அசுப பலம் பெற்று நிற்பது.

8. ஹீமோபிலியாவை ஆயுர்வேதம் ரத்த பித்தம் என்கிறது. எனவே பித்த கிரகமான சூரியன் மற்றும் செவ்வாய் அசுப தொடர்பில் நின்றாலும் ரத்தம் உறையாமை நோய் ஏற்படும் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

9.  ஹீமோபீலியா விட்டமின் C மற்றும் விட்டமின் K குறைபாட்டினால் வரும் என மருத்துவ உலகம் கூறுகிறது. விட்டமின் C மற்றும் விட்டமின் K ஆகிய இரண்டிற்கும் காரகர் சனைச்சர பகவான் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

இந்த ஹீமோபிலியா நோய் விக்டோரியா மகாராணியாருக்கும் அவரின் வாரிசுகளுக்கும் இருந்ததாகத் தெரிகிறது. மேலும் அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் அவர்களுக்கும் இந்த நோய் இருந்தது தெரிய வருகிறது. எனவே இதை ராஜ நோய் என்பார்கள்.

விக்டோரியா மகாராணியின் ஜாதகத்தில் ரிஷப லக்னமாகி லக்னத்தில் சூரியனும் சந்திரனும் நின்றும் சனி மற்றும் ராகுவின் அசுப பார்வை பெருவதும், லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியுமான சுக்கிரன் மற்றும் பூர்வபுன்னியாதிபதியான புதனும் சேர்ந்து பன்னிரண்டில் மறைந்து லக்னம் பலமற்று நிற்பதும், ஒன்பதாம் அதிபதியான சனி செவ்வாய் மற்றும் ராகுவோடு சேர்க்கை பெற்று நிற்பதும் ஜென்ன 1-5-9 அதிபதிகளை பலமிழக்க செய்தது. மேலும் குரு நீசம் பெற்றதும், ஹீமோபிலியா நோய்க்கு முக்கிய காரக கிரகமான சனியும் செவ்வாயும் ராகுவோடு சேர்க்கை பெற்றும் குருவின் வீடு மற்றும் ஜெனன ஜாதக பதினோராம் வீட்டில் நின்றது ஹீமோபீலியா நோய்க்கான முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்ரஹாம் லிங்கனின் ஜாதகத்தில் விருச்சிக லக்னமாகி சனி லக்னத்தில் நின்றதும், லக்னாதிபதி ராகுவோடு சேர்க்கை பெற்று பன்னிரண்டில் மறைந்ததும், ஐந்தாமதிபதி குரு உச்சம் பெற்ற பன்னிரெண்டாமதிபதியான சுக்கிரனோடு சேர்க்கை பெற்றதும், குரு ஐந்தாம் வீட்டிலேயே நின்று காரஹோ பாவ நாஸ்தியடைந்ததும், ஒன்பதாம் அதிபதியான சந்திரன் சனி வீட்டில் நின்று செவ்வாயின் பார்வையைப் பெற்றதும், சூரியன் அஷ்டமாதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றதும் ஆறாம் வீட்டில் கேது நின்றதும் ஆப்ரஹாம் லிங்கனுக்கு இந்த நோய் ஏற்படக் காரணமாயிற்று.
 
ஹீமோபிலியா நோயிற்கான பரிகாரங்கள்:

ஹீமோபிலியா ஒரு மரபணு சார்ந்த பரம்பரை நோய் என்பதால் இதை முழுவதும் குணப்படுத்தமுடியாது. என்றாலும் இதனால் ஏற்படும் உபாதைகளைக் குறைக்க சில பரிகாரங்களை செய்யலாம்.

1. ரத்தத்தின் காரகரான செவ்வாயின் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய்க் கிழமைகளில் சென்று வரலாம். 

2. குரு மற்றும் செவ்வாய் இருவருக்குமாக ஒரே ஸ்தலமாக விளங்கும் திருச்செந்தூருக்கு செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் சென்று வருவது.

3.  ரத்தம் உறையாமையின் காரகரான சனைச்சர பகவானை கும்பகோணம் நாச்சியார் கோயில் அருகே திருநரையூரில் இருக்கும் குடும்ப சனி பகவானை குடும்பத்துடன் சனிக்கிழமைகளில் தரிசிப்பது மரபணு பிரச்னையை தீர்க்கும்.

4. சனைச்சர பகவானின் காரகம் பெற்ற விட்டமின் C மற்றும் விட்டமின் K நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது.

5.நெருங்கிய ரத்த சம்மந்த உறவுகளில் திருமணம் செய்யாமல் இருப்பது.


- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.