தினம் ஒரு தேவாரம்

113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 3

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 3:

    இளிபடும் இன் சொலினார்கள் இருங்குழல் மேல் இசைந்து ஏறத்
    தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழிலார் கடம்பூரில்
    ஒளிதரு வெண்பிறை சூடி ஒண்ணுதலோடு உடனாகிப்
    புலி அதள் ஆடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே

விளக்கம்:

இளி=ஏழிசைகளில் ஒன்று, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு இசைகள்; ஒண்ணுதல்=ஒளிவீசும் நெற்றி; தீத்தொழிலார்=வேள்வி புரியும் அந்தணர்கள்'; வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், தானம் பெற்றுக் கொள்ளுதல், தானம் வழங்குதல் ஆகிய ஆறும் அந்தணர்களின் தொழில்களாக பண்டைய நாட்களில் கருதப்பட்டன. காலப்போக்கில் இவை அனைத்தும் மாறி, அனைவரும் பொருள் ஈட்ட பலவிதமான அலுவல்களில் ஈடுபடுவதும் நமது கல்விமுறையும் அதற்கேற்ப மாறுபட்ட நிலையில் உள்ளதும் இன்றைய நிலை. எனவே இன்றைய நிலையின் பின்னணியில் அந்தணர்களுக்கு பண்டைய நாட்களில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நெறிகளை ஆராய்வது சற்று கடினமே. இந்த பாடலில் மகளிர் கூந்தலில் வேள்விப்புகை சென்று படிவதாக சம்பந்தர் கூறுகின்றார். இன்றும் நவகிரக வேள்விகள் செய்யும்போது இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயரைச் சொல்லி நெய்யும் சமிதும் இட்டு ஆகுதிகள் வழங்குவது பழக்கத்தில் உள்ளது. இருபத்தேழு நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவியராக கருதப்படுவதை நாம் அறிவோம். எனவே இந்த நட்சத்திரங்களை குறித்து வேள்விகள் செய்யப்பட்டதை குறிக்கின்றார் என்று பொருள் கொள்ளலாம்.

சாமவேதத்தைச் சார்ந்த அந்தணர்களுக்கு ஔபாசனம் என்று சொல்லப்படும் சடங்கினைச் செய்யும் தகுதி, அவர்களின் மனைவி அவர்கள் அருகே இருந்தால் தான் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களும், மனைவியை இழந்தவர்களும் இதனைச் செய்யக் கூடாது. மேலும் திருமணம் ஆனவர்களும் அவர்களது மனைவி அவரது அருகில் இருந்து, இருவரும் மணையில் அமர்ந்தால் தான் இதனைச் செய்ய இயலும். பல சுப அசுப காரியங்களுக்கு முன்னர் புண்யாவாசனம் மற்றும் ஔபாசனம் செய்த பின்னரே, அந்தந்த சடங்குகளை தொடங்க இயலும். இன்றும் இந்த வழிமுறை பின்பற்றப் படுகின்றது. தினமும் ஔபாசானம் செய்பவர்கள் ஒரு சிலர் இன்றும் உள்ளனர். இந்த வழிமுறை வேதங்களில் சொல்லப்பட்டு வருவதால், சம்பந்தரின் காலத்திலும் பழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. இந்த வழக்கத்தையே சம்பந்தர் கூறுகின்றார் என்று சிலர் கருதுகின்றனர். இந்த விளக்கமும் மிகவும் பொருத்தமாக உள்ளது. தெளிபடு கொள்கை=தெளிவான கோட்பாடு. புனைதல்=அணிதல்; இருங்குழல் மேல் இசைந்து ஏற என்ற தொடருக்கு, மகளிரின் நீண்ட கூந்தல் போன்று வளைந்து வேள்வித் தீயின் புகை மேலெழுந்து எங்கும் பரவி விளங்கும் தலம் என்று சிலர் பொருள் கூறுகின்றனர்.   

பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானின் பொற்கழல்கள் நமக்கு மறுமையில் வீடுபேற்றினை அளித்தும் இம்மையில் இன்பம் அளித்தும் அருள் புரிகின்றன என்று உணர்த்தும் சம்பந்தர், இந்த பாடலில் அந்த திருவடிகளை நாம் போற்றி வணங்கி அந்த பயன்களை பெற வேண்டுமென்று அறிவுரை கூறுகின்றார்.     

பொழிப்புரை:

இசை இனிமையும் சொல்லினிமையும் கலந்த சொற்களை பேசும் மகளிரின் கரிய கூந்தல்களில் வேள்விப் புகை ஏறும் வண்ணம் வேள்விகளைச் செய்யும் தெளிந்த கொள்கையராகிய அந்தணர்கள் நிறைந்த கடம்பூர் தலத்தில், ஒளி வீசும் வெண்மை நிறமுடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனாக, ஒளி பொருந்திய நெற்றியினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுள்ளவனாக, புலியின் தோலை ஆடையாக ஏற்று அணிந்தவனாக, திகழும் பெருமானின் பொற்கழல்களை நாம் போற்றுவோமாக.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT