முகப்பு
விளையாட்டு

கோலி, தினேஷ் சதம்: இலங்கையை பந்தாடியது இந்தியா

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

Updated On : 2 ஜூன் 2013, 3:43 am IST
பகிர்:

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.

கோலி 120 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 81 பந்துகளில் 2 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்தார்.

Advertisement

Advertisement

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. அதை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, இலங்கையை பேட் செய்ய அழைத்தது. அந்த அணியில் குஷல் பெரேராவும், தில்ஷானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி இந்தியா தரப்பில் பந்துவீசிய 7 பெüலர்களையும் பந்தாடியது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 35.1 ஓவர்களில் 209 ரன்கள் குவித்தனர்.

தில்ஷான் 78 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், பெரேரா 94 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் எடுத்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினர். இதன்பிறகு வந்த குமார் சங்ககாரா 32 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 45, ஜெயவர்த்தனா 30, சன்டிமால் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசிக் கட்டத்தில் திசாரா பெரேரா 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் சேர்க்க அந்த அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது.

கோலி சதம்: பின்னர் ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவன் 1 ரன்னிலும், முரளி விஜய் 18, ரோஹித் சர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழக்க 12.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதன்பிறகு கோலியுடன் இணைந்தார் ரெய்னா. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 19-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது இந்தியா. ரெய்னா 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கோலியுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இந்த ஜோடி அதிரடியாக விளையாட இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து வேகம் காட்டிய கோலி 95 பந்துகளில் சதமடித்தார். அவர் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து தினேஷ் கார்த்திக்குடன் இணைந்தார் கேப்டன் தோனி. இந்திய அணி வெற்றியை நெருங்கியபோது தினேஷ் கார்த்திக் சதமடித்தார். அவர் 79 பந்துகளில் சதத்தை எட்டினார்.

49-வது ஓவரின் கடைசிப் பந்தில் கார்த்திக் பவுண்டரி அடிக்க, இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. கார்த்திக் 106, தோனி 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சுருக்கமான ஸ்கோர்

இலங்கை-333/3

(தில்ஷான் 84, பெரேரா 82,

மிஸ்ரா 1வி/53)

இந்தியா-337/5

(கோலி 144, தினேஷ் 106*,

எரங்கா 2வி/60)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.