ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு சர்தார் சிங் கேப்டன்
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள இளம் இந்திய அணிக்கு சர்தார் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள இளம் இந்திய அணிக்கு சர்தார் சிங் (படம்) கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 8 நாடுகள் பங்கேற்கின்றன.
Advertisement
இதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் கடந்த 25 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற பயிற்சி முகாமின் அடிப்படையில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முன்னணி முன்கள வீரர்களான டேனிஸ் முஜ்தபா, எஸ்.வி.சுனில், குருவிந்தர் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகிவிட்ட நிலையில், ரமன்தீப் சிங், நிகின் திம்மையா, நிதின் திம்மையா, மன்தீப் சிங், மாலக் சிங் ஆகிய 5 இளம் முன்கள வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் தடுப்பாட்டக்காரர் அமித் ரோஹிதாஸ், நடுகள வீரர் எஸ்.கே.உத்தப்பா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆசிய கோப்பை போட்டிக்காக இந்திய அணி வரும் 16-ம் தேதி மலேசியா செல்கிறது. "பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் (ஆக.24) ஓமனையும், 2-வது ஆட்டத்தில் (ஆக.26) கொரியாவையும், 3-வது ஆட்டத்தில் (ஆக.28) வங்கதேசத்தையும் சந்திக்கிறது.
"ஏ' பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனதைபே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அணி விவரம்
கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ் (துணை கேப்டன்), பி.டி.ராவ். தடுப்பாட்டம்: ரகுநாத், ரூபிந்தர் பால் சிங், அமித் ரோஹிதாஸ், கோதாஜித் சிங், பைரேந்திர லகரா, குருமயில் சிங். நடுகளம்: சர்தார் சிங் (கேப்டன்), மன்பிரீத் சிங், சிங்லென்சனா சிங், தரம்வீர் சிங், எஸ்.கே.உத்தப்பா. முன்களம்: ரமன்தீப் சிங், நிதின் திம்மையா, மன்தீப் சிங், மாலக் சிங், நிகின் திம்மையா.