மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்: க்ருணால் பாண்டியா
இந்திய அணிக்காக மீண்டும் விளையாட விரும்புவதாக க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக மீண்டும் விளையாட விரும்புவதாக க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் (மே 10) ராய்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பந்துவீச்சில் புவனேஷ் குமார் அசத்திய நிலையில், பேட்டிங்கில் க்ருணால் பாண்டியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினார். அதிரடியாக விளையாடிய அவர் 46 பந்துகளில் 73 ரன்கள் (4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) எடுத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அணியில் உள்ள அனைவருக்கும் விராட் கோலி உத்வேகமளிப்பதாகவும், இந்திய அணிக்காக மீண்டும் விளையாட விரும்புவதாகவும் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலியைப் பார்த்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். ஒரு தொடருக்காக அவர் தயாராகும் விதம் மிகவும் நம்பமுடியாத விதத்தில் இருக்கும். போட்டிக்கு முன்பு அவர் மிகவும் தீவிரமான பயிற்சியில் ஈடுபடுவார். இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தபோது, நான் அவருடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவருக்கு எதிராகவும் விளையாடியிருக்கிறேன். தற்போது, ஆர்சிபி அணியில் அவருடன் இணைந்து விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ஐபிஎல் தொடரில் விளையாடி அணிக்காக கோப்பையை வெல்வது மிகவும் சிறப்பான உணர்வைத் தரும். ஆனால், ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும். என்னுடைய சிறுவயதிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. தற்போதும் எனக்குள் அந்த கனவு இருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடுவது மிகப் பெரிய கௌரவம். மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அந்த கனவு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்றார்.
ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியா கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். 35 வயதாகும் அவர், இந்திய அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Krunal Pandya has stated that he wishes to play for the Indian team again.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.