இந்திய அணியில் விளையாட வைபவ் சூர்யவன்ஷிக்கு விரைவில் அழைப்பு வரும்: சங்ககாரா
இந்திய அணியில் விளையாட வைபவ் சூர்யவன்ஷிக்கு விரைவில் அழைப்பு வரும் என்று ராஜஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் சங்ககாரா தெரிவித்தது குறித்து...
இந்திய அணியில் விளையாட வைபவ் சூர்யவன்ஷிக்கு விரைவில் அழைப்பு வரும் என்று ராஜஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி (15) இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடி 776 ரன்களைக் குவித்துள்ளார். இதன்மூலம், தற்போது ஆரஞ்சு கேப்பையும் தன்வசம் தக்க வைத்துள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் ஷுப்மன் கில் அல்லது சாய் சுதர்சன் ஆகியோர் ரன்களில் அவரை முந்தவில்லை என்றால், இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக வைபவ் சூர்யவன்ஷி தேர்வுபெற வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
நேற்றிரவு நடந்த குவாலிஃபயர் 2 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 214/6 ரன்கள் குவிக்க, குஜராத் டைட்டன்ஸ் 18.4 ஓவர்களில் 219/3 ரன்கள் எடுத்து வென்றது. இருந்தபோதிலும், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இது குறித்து ராஜஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்ததாவது:
உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிரே வைபவ் சூர்யவன்ஷி விளையாடிய திறமையைப் பார்க்கும்போது, எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள அவர் தயாரக உள்ளார் என்று நான் நினைக்கிறேன். ஆகையால், விரைவில் இந்திய அணியிலிருந்து வைபவ் சூர்யவன்ஷிக்கு அழைப்பு வரும் என்று என்னால் உறூதியாகக் கூற முடியும்.
அவர் மிகவும் முதிர்ச்சியாக பேட்டிங் செய்கிறார். இந்த சீசன் முழுவதும் தொடக்க ஆட்டக்காரர்களுக்கான பொறுப்பைத் தனது தோளில் சுமந்துள்ளார்.
அவர் மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். அவரைச் சுற்றி விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் பதற்றமடையாமல் நல்ல ஒரு கட்டுப்படுத்தக்கூடிய இலக்கை நிர்ணயிக்க வழிவகை செய்தார். அவர் ஆட்டத்தை நன்றாக கணிக்கிறார். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாடுகிறார்.
இந்த சீசனில் அவர் வெளிப்படுத்திய திறமையைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் தொடர்ந்து இதே வேகத்தில், முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். ஆண்டுகள் செல்லச் செல்ல அவர் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன்.
அனைத்து ஆட்டக்காரர்களுக்கும் எவ்வாறு பயிற்சி அளித்தோமோ அதையேதான் சூர்யவன்ஷிக்கும் அளித்தோம். அவருக்கென்று தனியாக எந்தப் பயிற்சியும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.