பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா! 3-0 என தொடரை வென்றது!
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டையும் வென்று 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி...
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டையும் வென்று 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.
ஜோகனாஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 90 ரன்கள் எடுத்தார். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் சர்ஃபராஸ் அஹமது 50 ரன்கள் எடுத்தார். டுயானே ஆலிவியர் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 303 ரன்கள் எடுத்தது. குயிண்டன் டி காக் 129 ரன்கள் எடுத்து அசத்தினார். இதையடுத்து 3-வது டெஸ்டை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 381 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. அசாத் ஷஃபிக் 48, பாபர் அஸாம் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பினார்கள்.
Advertisement
Advertisement
ஓரளவு இலக்கை நெருங்கிய பாகிஸ்தானி அணி, 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அசாத் ஷஃபிக் 65 ரன்கள் எடுத்தார். ஆலிவியர், ரபாடா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனால் டெஸ்ட் தொடரை 3-0 என வென்றது தென் ஆப்பிரிக்க அணி.
ஆட்ட நாயகன் விருதை குயிண்டன் டி காக்கும் தொடர் நாயகன் விருதை ஆலிவியரும் வென்றார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.