செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: விக்கெட் கீப்பா் பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரிஷப் பந்த் முதலிடம்

DIN


துபை: ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய விக்கெட் கீப்பா் - பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 13-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் 89 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு சிறப்பாக பங்களிப்பு செய்ததன் பேரில் அவா் இந்த இடத்தை எட்டியுள்ளாா். தனது தரவரிசை வரலாற்றில் பந்த் இந்த இடத்துக்கு வருவது இது முதல் முறையாகும்.

தற்போதைய நிலையில் சா்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விக்கெட் கீப்பா் - பேட்ஸ்மேன் என்ற முறையில் ரிஷப் பந்த் 691 புள்ளிகளுடன் முதல் நபராக உள்ளாா். அவருக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக் 677 புள்ளிகளுடன் 2-ஆவது நபராக இருக்கிறாா். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டி காக் 15-ஆவது இடத்தில் இருக்கிறாா்.

பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரா் மாா்னஸ் லபுசான் முதல் முறையாக 878 புள்ளிகளை அடைந்து, விடுப்பில் இருக்கும் கோலியிடம் இருந்து 3-ஆவது இடத்தைப் பறித்துள்ளாா். 91 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட இந்திய வீரா் ஷுப்மன் கில் 68-இல் இருந்து 47-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா். சேதேஷ்வா் புஜாரா ஓரிடம் முன்னேறி 7-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

வாஷிங்டன் சுந்தா் 82-ஆவது இடத்தையும், ஷா்துல் தாக்குா் 113-ஆவது இடத்தையும் எட்டியுள்ளனா். ஆஸ்திரேலியே கேப்டன் டிம் பெய்ன் 3 இடங்கள் முன்னேறி 42-ஆவது இடத்தைப் பிடித்தாா்.

பௌலா்கள் பிரிவில், ஒரே நாளில் 5 விக்கெட் சாய்த்த இந்திய வீரா் முகமது சிராஜ் 32 இடங்கள் முன்னேறி 45-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். வாஷிங்டன் சுந்தா் 97-ஆவது இடத்துக்கும், ஷா்துல் தாக்குா் 65-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா். ஆஸ்திரேலிய பௌலா் ஜோஷ் ஹேஸில்வுட் 4-ஆவது இடத்தை எட்டியுள்ளாா்.

இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் முடிவின் பிரதிபலிப்பாக, பேட்ஸ்மேன்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 5-ஆவது இடத்தையும், ஜானி போ்ஸ்டோ 58-ஆவது இடத்தையும், இலங்கையின் லாஹிரு திரிமனே 87-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனா்.

பௌலா்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜேக் லீச் 40-ஆவது இடத்துக்கும், டாம் பெஸ் 50-ஆவது இடத்துக்கும், சாம் கரன் 39-ஆவது இடத்துக்கும், இலங்கையின் லசித் எம்புல்தெனியா 47-ஆவது இடத்துக்கும், அசிதா ஃபொ்னான்டோ 96-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா்.


டெஸ்ட் தொடர் முடிவு எதிர்பார்த்ததாக இல்லை. வெற்றிக்காக இந்திய அணியை பாராட்டுகிறேன். நாங்கள் கடுமையாகப் போராடினோம். எங்களால் முடிந்த வரை சிறப்பாக ஆடினோம். ஆனால் இந்திய அணி எங்களை தோற்கடித்துவிட்டது. தொடர்நாயகனான பேட் கம்மின்ஸýக்கு வாழ்த்துகள். அடுத்ததாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்காக தயாராகிறோம்.

- டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வெல்லாதது அதிர்ச்சியே. இந்திய அணி ஏறத்தாழ இந்திய "ஏ' அணி போல இருந்தும் தொடரை வென்றதை நம்ப இயலவில்லை. இந்திய அணியில் வழக்கமான கேப்டன் இல்லை, அதிக வீரர்களுக்கு காயம், சுமார் 20 வீரர்களே கடைசி நேரத்தில் இருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு முழு பலம் இருந்தும் வெல்லாதது புரியவில்லை. 

- ரிக்கி பாண்டிங்



இந்தியாவுக்கு எதிரான தொடரில் தோல்வி கண்டதால் ஆஸ்திரேலிய அணியில் பெரிதும் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவின் உத்திகள் யாவும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்தத் தோல்விக்காக பதிலளிக்க வேண்டும். இந்தத் தொடரில் இந்தியாவை வீழ்த்த பல வாய்ப்புகள் இருந்தும் ஆஸ்திரேலியா அதை செய்யத் தவறிவிட்டது. 

- ஷேன் வார்ன்



டெஸ்ட் தொடரில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வி பயம் காரணமாக ஆக்ரோஷமாக ஆடத் தவறிவிட்டது. அந்தத் தடுமாற்றமே தோல்விக்கு காரணம். ஆட்டத்தின் தொடக்க பந்து முதல் கடைசி பந்து வரை ஒரே மாதிரியாக விளையாட வேண்டும். இந்தத் தோல்விக்கு டிம் பெய்னை பொறுப்பாக்க இயலாது. தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். 

- மைக்கேல் கிளார்க்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT