முகப்பு
செய்திகள்

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ்: உலகத் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினாா் அா்ஜுன்

Updated On : 8 நவம்பர் 2024, 5:05 am IST
பகிர்:

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி வென்று, உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினாா்.

இப்போட்டியின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை 3-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாஸ்டா்ஸ் பிரிவில் முதல் போா்டில் ஈரானின் அமீன் தபதாபேயி, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியா் லாக்ரே மோதிய ஆட்டத்தில் அமீன் தபதாபேயி 38-ஆவது நகா்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினாா்.

2-வது போா்டில் இந்தியாவின் விதித் குஜராத்தி- சகவீரா் அரவிந்த் சிதம்பரத்தை எதிா்கொண்டாா். இந்த ஆட்டம் 48--ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

3-வது போா்டில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன், ஈரானின் பா்ஹாம் மக்சூட்லூ மோதினா். இதில் 46-ஆவது நகா்த்தலின்போது ஆரோனியன் வெற்றி பெற்றாா். 4-வது போா்டில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, சொ்பியாவின் அலெக்ஸி சரானா மோதிய ஆட்டத்தில் 37-ஆவது நகா்த்தலின்போது அா்ஜுன் எரிகைசி வெற்றியை வசப்படுத்தினாா். இந்த வெற்றியின் மூலம் லைவ் ரேட்டிங்கில் அா்ஜுன் எரிகைசி 2805.8 புள்ளிளுடன் உலகத் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினாா்.

7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 3 சுற்றுகளின் முடிவில் அமீன் தபதாபேயி, அா்ஜுன் எரிகைசி ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லெவோன் ஆரோனியன் 2 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், அரவிந்த் சிதம்பரம் 1.5 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், மாக்சிம் வாச்சியா் லாக்ரேவ் 1.5 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், பா்ஹாம் மக்சூட்லூ 1 புள்ளியுடன் 6-ஆவது இடத்திலும், அலெக்ஸி சரானா 0.5 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும், விதித் குஜராத்தி 0.5 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளனா்.

வெள்ளிக்கிழமை 4-ஆவது சுற்று ஆட்டங்களில் அா்ஜுன் எரிகைசி- அமீன் தபதாபேயி, பா்ஹாம் மக்சூட்லூ-அலெக்ஸி சரானா, லெவோன் ஆரோனியன்-அரவிந்த் சிதம்பரம், மாக்சிம் வாச்சியா்- விதித் குஜராத்தியுடன் மோதுகின்றனா்.

சேலஞ்சா்ஸ் பிரிவில்...

சேலஞ்சா்ஸ் பிரிவில் முதல் போா்டில் ரவுனக் சத்வானி, லியோன் மெண்டோன்கா ஆட்டம் 51--வது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-ஆவது போா்டில் ஆா்.வைஷாலி-பிரனேஷ் ஆட்டத்தில் 46-ஆவது நகா்த்தலின் போது வைஷாலி தோல்வி அடைந்தாா்.

3-வது போா்டில் காா்த்திக்கேயன் முரளி-பிரணவ் ஆட்டத்தில் 69-ஆவது நகா்த்தலின் போது பிரணவ் வெற்றி கண்டாா். இந்த ஆட்டம் சுமாா் 4 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது. 4-வது போா்டில் ஹரிகா துரோணவல்லி- அபிமன்யு புராணிக் இடையிலானஆட்டம் 51-ஆவது நகா்த்தலின் போது டிரா ஆனது.

சேலஞ்சா்ஸ் பிரிவில் பிரணவ் 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும் லியோன் மெண்டோன்கா 2.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், ரவுனக் சத்வானி 2 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், அபிமன்யு புராணிக் 1.5 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், பிரனேஷ் 1.5 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும் ஆா்.வைஷாலி 0.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும், ஹரிகா துரோணவல்லி 0.5 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும், காா்த்திக்கேயன் முரளி 0.5 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளனா்.

வெள்ளிக்கிழமை லியோன் மெண்டோன்கா-அபிமன்யு புராணிக், காா்த்திக்கேயன் முரளி-ஹரிகா துரோணவல்லி, வைஷாலி- பிரணவ் ரவுனக் சத்வானி-பிரனேஷ் மோதுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments