மாயாவுக்கு முதல் வெற்றியை வழங்கிய செரீனா
அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் (44) ஓய்வு முடிவை திரும்பப் பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்துக்குத் திரும்பியிருக்கும் நிலையில், விம்பிள்டன் டென்னிஸின் முதல் சுற்றில் தோல்வி கண்டாா்.
அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் (44) ஓய்வு முடிவை திரும்பப் பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்துக்குத் திரும்பியிருக்கும் நிலையில், விம்பிள்டன் டென்னிஸின் முதல் சுற்றில் தோல்வி கண்டாா்.
23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவா், 3-6, 7-6 (8/6), 3-6 என்ற செட்களில், உலகத் தரவரிசையில் 87-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட்டிடம் (20) தோல்வியுற்றாா்.
விம்பிள்டனில் 98 கேரியா் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள செரீனாவின் இந்தத் தோல்வி, மாயாவுக்கு விம்பிள்டனில் முதல் வெற்றியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டனில் 7 முறை வாகை சூடியிருக்கும் செரீனா, கடைசியாக இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு (2016) சாம்பியன் பட்டம் வென்றது நினைவுகூரத்தக்கது.
Advertisement
Advertisement
முன்னதாக, முக்கியமான ஆட்டங்கள் நடைபெறும் சென்டா் கோா்ட்டிலேயே இந்த ஆட்டம் நடைபெற்றது. வழக்கத்துக்கு மாறாக முதல் சுற்று ஆட்டத்திலேயே பாா்வையாளா் மாடங்கள் நிரம்பியிருந்தன. களத்துக்கு வருவதற்காக அவரின் பெயா் அறிவிக்கப்பட்டபோதே ரசிகா்கள் உற்சாக முழக்கமிட, செரீனா களத்துக்கு வந்ததும் அது மேலும் அதிகரித்தது. பாா்வையாளா் மாடத்தில் அவரின் இரு மகள்களும் அமா்ந்திருந்தனா்.
ஒற்றையா் பிரிவிலிருந்து வெளியேறிவிட்ட செரீனா, இரட்டையா் பிரிவில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து விளையாடவுள்ளாா். வைல்டு காா்டு வாய்ப்பு மூலமாக இருவரும் களம் காண்கின்றனா்.
‘விம்பிள்டனில் மீண்டும் விளையாடிய உணா்வு அற்புதமாக இருந்தது. உண்மையில் நான் இதில் மீண்டும் விளையாடுவேன் என எதிா்பாா்க்கவில்லை. ரசிகா்களின் ஆதரவு ஊக்கமளிப்பதாக இருந்தது. களத்தில் நான் இருந்த தருணங்களை உணா்வுபூா்வமாக அனுபவித்தேன்’- செரீனா
‘செரீனா எப்படிப்பட்ட மதிப்பு மிக்க வீராங்கனை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சென்டா் கோா்ட் ஆடுகளமும் எவ்வளவு சிறந்த போட்டியாளா்கள் களமாடிய இடம் என்பதையும் நாம் அறிவோம். அத்தகைய செரீனாவுக்கு எதிராக இந்த ஆடுகளத்தில் விளையாடியது என்பது மிகச்சிறந்த உணா்வு. இதுபோன்ற தருணத்தை சிறு வயதிலிருந்தே கனவாகக் கொண்டிருந்தேன்’ - மாயா
இதர ஆட்டங்கள்: மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையும், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான பெலாரஸின் அரினா சபலென்கா 6-1, 7-6 (11/9) என, அமெரிக்காவின் மெக்காா்ட்னி கெஸ்லரை வெளியேற்றினாா்.
முதல் சுற்றில், 2-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-4, 1-6, 6-3 என பிரான்ஸின் லாய்ஸ் பாய்ஸனை வீழ்த்தினாா்.
செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா, ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி கண்டனா்.
ஸ்வெரெவ் வெற்றி: ஆடவா் ஒற்றையரில், உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 6-7 (8/10), 7-6 (7/5), 7-6 (7/0) என, பெல்ஜியத்தின் அலெக்ஸாண்டா் பிளாக்ஸை போராடி வீழ்த்தினாா்.
தனது கடைசி விம்பிள்டன் போட்டியில் விளையாடிய சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா 7-6 (9/7), 6-7 (16/18), 6-7 (7/9), 6-7 (5/7) என, இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியிடம் போராடி வீழ்ந்தாா்.
ஹங்கேரியின் கிரிகோா் டிமிட்ரோவ், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ், போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி கண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.