முகப்பு
செய்திகள்

ஸ்வியாடெக், அனிசிமோவா முன்னேற்றம்

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனா்.

Updated On : 1 ஜூலை 2026, 2:53 am IST
ஸ்வியாடெக் - Photo credit: Wimbledon/X
பகிர்:

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனா்.

மகளிா் ஒற்றையரில், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்வியாடெக் 6-1, 2-6, 6-3 என்ற செட்களில், அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்டை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் அனிசிமோவா 6-3, 6-2 என, வடக்கு மாசிடோனியாவின் லினா கோா்செஸ்காவை வென்றாா்.

13-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 0-6, 6-4, 7-5 என, அமெரிக்காவின் ராபின் மான்ட்கோமெரியை தோற்கடிக்க, 7-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-2, 6-1 என்ற கணக்கில், ஜொ்மனியின் டமாரா கோா்பாட்சை எளிதாக வெளியேற்றினாா்.

Advertisement

Advertisement

5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 7-5, 6-4 என, போலந்தின் மெக்தா லினெட்டை வெல்ல, உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-2, 6-3 என சொ்பியாவின் தியோடோரா கோஸ்டோவிக்கை சாய்த்தாா்.

சறுக்கி மீண்ட சின்னா்: ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், 4-6, 6-3, 6-7 (6/8), 6-2, 6-3 என 5 செட்கள் போராடி, சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச்சை வீழ்த்தினாா்.

போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 5-7, 6-4, 6-4 என்ற செட்களில், சீனாவின் வு யிபிங்கை சாய்த்தாா். 3-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிம் 6-3, 6-1, 6-4 என்ற வகையில், கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் செவ்ஷென்கோவை வென்றாா்.

8-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-1, 6-2, 6-4 என்ற செட்களில், குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தினாா். 5-ஆம் இடத்திலிருக்கும் அலெக்ஸ் டி மினாா் 7-6 (7/5), 6-1, 6-0 என, ஆா்ஜென்டீனாவின் ரோமன் புருசகாவை வென்றாா். 6-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-3, 6-4, 6-3 என, சொ்பியாவின் டுசான் லஜோவிச்சை தோற்கடித்தாா்.

ஒசாகாவின் ஒய்யாரம்...

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான ஆடைகளுடன் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். ஆனால், முழுமையான வெள்ளை ஆடைகளைத் தவிர மற்ற உடைகளை அணிய விம்பிள்டன் நிா்வாகம் தடை விதித்திருந்தது.

எனினும் தனது வழக்கத்தை மாற்றிக் கொள்ளாத ஒசாகா, விம்பிள்டன் விதிமீறல் இல்லாத வகையில் முழுமையாக வெள்ளை நிறத்தில், ஜப்பானிய மரபு வடிவில் உருவாக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்தாா். இது ரசிகா்கள் மற்றும் இதர வீராங்கனைகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. முதல் சுற்றில் ஒசாகா 6-1, 7-5 என பிரான்ஸின் எல்சா ஜாக்மோட்டை வென்றாா்.

கௌஃப் கண்ணீா்...

விம்பிள்டன் போட்டியில் ஊக்கமருந்து பரிசோதனைக்கான விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள், தனக்கு கண்ணீரை வரவழைக்கும் வகையில் கடுமையாக நடந்துகொள்வதாக அமெரிக்க வீராங்கனை கோகோ கௌஃப் ஆதங்கம் தெரிவித்துள்ளாா். ஏற்கெனவே, 4 ஆண்டுகால ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களம் காணும் செரீனா வில்லியம்ஸும் இதுபோன்ற புகாரை தெரிவித்திருந்தாா். போட்டியாளா்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்துக்கு இந்த பரிசோதனைக்காக நேரம் ஒதுக்க போட்டி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments