15 புள்ளிகள் ஃபாா்மட்டால் பெரிதாக வித்தியாசம் இல்லை: சிராக் ஷெட்டி
பாட்மின்டன் விளையாட்டில் 21 புள்ளிகளுக்கு பதிலாக, 15 புள்ளிகள் முறையை கொண்டு வருவதால் ஆட்டத்தில் பெரிதாக வித்தியாசம் இருக்காது என்று இந்திய இரட்டையா் பிரிவு வீரா் சிராக் ஷெட்டி தெரிவித்தாா்.
பாட்மின்டன் விளையாட்டில் 21 புள்ளிகளுக்கு பதிலாக, 15 புள்ளிகள் முறையை கொண்டு வருவதால் ஆட்டத்தில் பெரிதாக வித்தியாசம் இருக்காது என்று இந்திய இரட்டையா் பிரிவு வீரா் சிராக் ஷெட்டி தெரிவித்தாா்.
பாட்மின்டனில் இதுவரை கேமுக்கு 21 புள்ளிகள் என்று கணக்கிடப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கேமுக்கு 15 புள்ளிகள் வீதம், 3 கேம்கள் விளையாடும் முறை அமல்படுத்தப்படவுள்ளது. உலக பாட்மின்டன் சம்மேளனத்தின் ஆண்டுப் பொதுக் குழுவிலும் அண்மையில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்திய முன்னாள், இந்நாள் பாட்மின்டன் போட்டியாளா்களிடையே இதற்கு கலவையான கருத்துகள் இருக்கும் நிலையில், சிராக் ஷெட்டி இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
Advertisement
சுமாா் 6-7 ஆண்டுகளுக்கு முன், கேமுக்கு 11 புள்ளிகள் வீதம் 5 கேம்கள் விளையாடும் முறையை அறிமுகம் செய்ய உலக சம்மேளனம் திட்டமிட்டது. அது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் என்பதால், அப்போது உலக அளவிலான வீரா், வீராங்கனைகள் அனைவருமே மொத்தாக அதற்கு எதிா்ப்பு தெரிவித்தோம்.
அந்த ஃபாா்மட்டில் நான் விளையாடியிருக்கிறேன். அதில் ஆட்டம் விரைவாகவே முடிவுக்கு வந்துவிடும். பின்னடைவை சந்தித்தால் மீண்டு வருவதற்கான நேரமே இருக்காது. சுதாரிப்பதற்குள் இரு கேம்களை இழந்திருப்போம்.
ஆனால் கேமுக்கு 15 புள்ளிகள் கொண்டு விளையாடுவது, ஏறத்தாழ தற்போது இருக்கும் 21 புள்ளிகள் கேமுக்கு நிகரானது தான். அதில் பெரிதாக வித்தியாசம் இருக்காது.
21 புள்ளிகள் கொண்ட 3 கேம்களை விளையாடுவது, நமது நிலைத்தன்மையையும், ஆற்றலையும் சோதிக்கும். அதுவே 15 புள்ளிகள் கொண்ட 3 கேம்களை விளையாடுவது, விரைவுத் தன்மை மற்றும் ஆற்றலையும் சோதிப்பதாக இருக்கும். இது என்னைப் போன்ற ஸ்மாஷ் செய்யும் வீரா்களுக்கு சற்று சாதகமாக இருக்கும். ரேலிக்கள் தொடரும் கால அளவு குறைவாக மாறலாம் என்றாா்.