எல்லா நாளும் ஒன்றுபோல இருக்காது; வருங்காலம் பாஜக காலமாகத்தான் இருக்கும்: நயினார் நாகேந்திரன்
எல்லா நாளும் ஒன்றுபோல இருக்காது, வருங்காலம் பாஜக காலமாகத்தான் இருக்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறியது பற்றி..
எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. வரும் காலம் நிச்சயம் பாஜக காலமாகத்தான் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
நெல்லையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: திமுகவில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்திருந்த முன்னாள் மாவட்டத் தலைவர் தயா சங்கர் மற்றும் மாவட்டப் பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் ஆகியோர், தற்போது மீண்டும் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து பேசிய நயினார் நாகேந்திரன், "பாஜகவில் இருந்து பலரும் பிரிந்து சென்றுவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை பாஜகவை விட்டு யாரும் வெளியே செல்லவில்லை. மாறாக, மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி பலரும் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு – முதலமைச்சருக்குக் கடுமையான கேள்விகளை அவர் முன் வைத்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 207 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் 40 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் தற்போது எத்தனை கொலைகள், எத்தனை கற்பழிப்புகள் நடந்துள்ளன என்பதைப் பட்டியலிட அரசு தயாராக இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும், நேற்று 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முள்வேலியில் வீசப்பட்ட கொடூரமும் முதலமைச்சருக்குத் தெரியுமா? அவர் தினமும் சட்டப்பேரவை செல்கிறார், டிபன் சாப்பிடுகிறார், ஆனால் யாரிடமும் பேசுவதில்லை; சினிமாவில் இருப்பவர்களை மட்டுமே சந்தித்துப் பேசுகிறார். கரூரில் இறந்தவர்களின் உறவினர்களைப் போல, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அவர் பனையூரில் பார்க்கலாம் என நினைக்கிறார் போல" என்று மிகக் காட்டமாக விமர்சித்தார்.
தினசரி நடக்கும் இத்தகைய கொடூரங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்று திருமாவளவனின் கருத்து குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
குதிரை பேரமும், செயற்கையான இடைத்தேர்தல்களும்
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறுவது குறித்துப் பேசிய அவர், இது ஒரு தவறான செயல்பாடு என்றும், இதில் பெரிய அளவில் குதிரை பேரம் நடந்துள்ளதாகவும் சாடினார். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தவறு செய்த தமிழக அரசைத் தண்டித்து, ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றார்.
அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தல் வரப்போகிறது. அங்கே யாராவது இறந்து போனார்களா என்று தெரியவில்லை. அடுத்ததாக விராலிமலை, மதுராந்தகம், ஈரோடு, பெருந்துறை ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வரவுள்ளது. ஆதவ் அர்ஜுன் என்பவர் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரையும் விலைபேசி வாங்கிக் கொண்டிருக்கிறார். இடைத்தேர்தல் வருவதற்கு என்ன அவசியம் இருக்கிறது? அரசுப் பணத்தை வீணாகச் செலவு செய்யும் இத்தகைய செயல்பாடுகள் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகின்றன. அவகாசம் கொடுக்க முடியாத அளவிற்கு மோசமான சூழலை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்து ரூபாய் பாட்டில் என்று பாட்டுப் பாடியவர்கள், தற்போது பெரிய அளவில் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால், அமைச்சர் உச்சநீதிமன்றம் சொன்னதாகக் கூறி மழுப்புகிறார். முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகு தொடக்கத்தில் அதிர்ச்சியிலும், தற்போது முதிர்ச்சியின்றியும் இருக்கிறார். உதயநிதியின் செயல்பாடுகள் துணை முதலமைச்சராக இருந்தபோதும் சரியில்லை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரியில்லை என்றார் நயினார் நாகேந்திரன்.
சட்டமன்றத்தில் கலைஞர் புகைப்படம் வைக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், "இதுவரை முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் வைக்கப்படவில்லை. ஆனால், கூட்டணி தர்மத்திற்காக கலைஞர் புகைப்படம் வைக்கப்பட்டபோது நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டோம்" என்று குறிப்பிட்டார்.
பாஜகவின் எதிர்காலம் மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு, அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் மழுப்பலாகப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், "தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான். கூட்டணி குறித்த முடிவுகள் தேர்தல் வரும்போதுதான் எடுக்கப்படும்" என்று கூறினார்.
மேலும், "எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. வரும் காலம் நிச்சயம் பாஜக காலமாகத்தான் இருக்கும்" என்று நம்பிக்கையுடன் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.