சினி மினி
மெரினா, 3, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களின் மூலம் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், சிலர் நீங்கள் நடிப்பது போலவே தெரியவில்லையே என்கிறார்கள்.
மெரினா, 3, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களின் மூலம் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், சிலர் நீங்கள் நடிப்பது போலவே தெரியவில்லையே என்கிறார்கள். சிலர் நீங்கள் இன்னொரு பவர் ஸ்டாரா என்று கேட்கிறார்கள். நான் பவர் ஸ்டார் இல்லை. ஃபுவர் ஸ்டார். நல்ல நடிகனாக வேண்டும் என்பதுதான் லட்சியம். ஒரே பாணியிலான காமெடியை ரிபீட் செய்ய மாட்டேன். நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு ஆகியோர்தான் ரோல் மாடல். இந்த பட்டியலில் சந்தானம் இல்லையா என கேட்கலாம். அவர் என் சமகாலத்தவர். சம காலத்தவரை ரோல் மாடலாக ஏற்று கொள்ள முடியாது. - சிவ கார்த்திக்கேயன்
எப்போதும் பழமையை மறக்காதவர் டி.ராஜேந்தர். முதல் பட காலத்திலிருந்து இப்போது வரை திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதுவதற்கான பேப்பர், பேனாவை தியாகராயர் நகர் பர்கிட் சாலையில் இருக்கும் தெற்கு தண்டபாணி சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில்தான் வாங்குகிறார். இப்போது எழுதி, இயக்கி நடிக்கும் "ஒரு தலைக் காதல்' படம் வரைக்கும் இதுதான் டி.ஆரின் வழக்கம். இதை தன் ராசியென கருதுவார். சினிமாவில் நிலைத்த இடம் இல்லாத காலத்தில் தன்னை தங்க வைத்து உதவி செய்த "இடிச்சப்புளி' செல்வராஜூக்கு தன் எல்லாப் படங்களிலும் ஒரு கேரக்டர் கொடுத்து நன்றி கடன் செலுத்துகிறார்.
காதல், கல்யாணம் பற்றி நிறைய பேர் கேட்கிறார்கள். இந்த இரண்டுக்கும் என்னிடம் பதில் இல்லை. சில நேரங்களில் என்னை பற்றி வரும் கிசுகிசுக்களை படிக்கும் போது சிரிப்புதான் வரும். ஆனால் சில நேரங்களில் அதன் சீரியஸ் தன்மை புரிய வந்திருக்கிறது. நாளைக்கே கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் அந்த வாழ்க்கையில் நம்பிக்கை வர வேண்டும். யாரையும் ஏமாற்றக் கூடாது. உண்மையில் கல்யாண வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார் ஆண்ட்ரியா.
Advertisement
3 ஜீனியஸ்' என்ற படத்துக்காக விஞ்ஞானி வேடம் ஏற்கிறார் பாக்யராஜ். முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாக்கப்படும் இப்படத்தில் விஞ்ஞான மாற்றங்களால் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கதையாகிறது. விஞ்ஞானத்தின் உதவியால் அதி புத்திசாலிகளாக பிறக்கும் 3 குழந்தைகளின் வாழ்க்கைமுறை, நடைமுறை வாழ்க்கையோடு எப்படி ஒத்துப் போகிறது. அதனால் ஏற்படும் விபரீதங்கள் என திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பி.கே.ராஜ் கதை எழுதி இயக்குகிறார். மகேஷ் பி.தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆதிஷ் உத்ரியன் இசையமைக்கிறார். பல புதுமுக நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பிரகாச நடிகர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார் என்பதும், மும்பையைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டரான ஒரு பெண்ணை மணந்து கொண்டார் என்பதும் தெரிந்த செய்திதான். என்றாலும் முதல் மனைவியின் இரண்டு மகள்கள் மீதும் பிரகாச நடிகருக்கு பாசம் அதிகம். அவர்களை பாதுகாப்பாக வளர்க்க ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து "என் குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்' என்று குடி அமர்த்தினார். அந்த வீடு நடிகை குஷ்புவுக்கு சொந்தமானது. மாத வாடகை ரூ.50 ஆயிரம். இரண்டு வருடமாக அந்த வீட்டில்தான் முதல் மனைவி குழந்தைகளுடன் இருக்கிறார். கணவரை நம்பி தன் பெயரில் மிச்சம் இருந்த சொத்துக்களையும் எழுதிக்கொடுத்து விட்ட நிலையில் இப்போது வருமானம் இல்லாமல் வாடுகிறாராம். வீட்டு வாடகை 3 மாதம் பாக்கி. பிரகாச நடிகரை தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கிறார் குஷ்பு, காரணம்? பிரகாச நடிகரின் செல்போன் எப்போதும் ஸ்விட்ச் ஆஃப்.
உததயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடிக்கும் "கதிர்வேலன் காதல்' ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் படம். இதில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க கோபிகாவை கேட்டார்கள். "கதை பிடித்திருந்தால் பார்க்கலாம்' என்று சொன்னாராம் கோபிகா. டைரக்டர் கதையைச் சொன்னார். கதாநாயகி நயன்தாரா என்ற தகவல் பிறகுதான் தெரிந்தது. "எவ்வளவு பணம் தந்தாலும் சரியாக வராது' என்று மறுத்துவிட்டார். காரணம் நயன்தாரா முன்னணி நடிகையாக வரும் முன் கோபிகா கதாநாயகியாக நடித்த ஒரு மலையாள படத்தில் ஓரிரு சீன்களுடன் ஒரேயொரு டான்ஸ் ஆட சம்மதித்து பொள்ளாச்சியில் சூட்டிங் நடந்த இடத்துக்கு வந்துவிட்டு, நான் நடிக்க மாட்டேன் என்று காரில் ஏறிப் போய்விட்டார் நயன்தாரா. இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கப் போய் மோதல் வந்தால்...? எதற்கு வம்பு என்று ஒதுங்கிக்கொண்டாராம் கோபிகா. இப்போது கோபிகா மறுத்த வேடத்தில் நடித்து வருபவர் சாயாசிங். அதாவது உதயநிதி ஸ்டாலினுக்கு அக்காவாக. சாயாசிங் இனிமேல் அக்காசிங்.