முகப்பு
தமிழ்மணி

இந்த வார கலாரசிகன்

பத்திரிகை அனுவலகங்களில் பரவலாக ஒரு விவாதம் நடந்து வருகிறது.

Updated On : 12 மே, 2013 at 2:26 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

பத்திரிகை அனுவலகங்களில் பரவலாக ஒரு விவாதம் நடந்து வருகிறது. "ஒற்று' அவசியமா? இல்லையா? என்பதுதான் அந்த விவாதம். இது பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் எனக்குக் கவிஞர் வைரமுத்துவின் நினைவு வந்துவிடும்.

"ஒற்றுக்குப் பொருளிருக்கிறது. ஒற்று என்பது மொழியின் பிடிமானம்' என்பார் அவர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டையும் கூறுவார். "தந்தச் சிலை' என்பதில் ஒற்று இல்லாமல் போனால் அது தந்த சிலையாகிவிடும் என்பார்.

ஒற்று வேண்டுமா வேண்டாமா என்கிற விவாதம் எழுந்தால், மேலே சொன்ன கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளை நினைவில் கொள்ளுங்கள், மயக்கம் தெளிந்துவிடும்.

Advertisement

--------------------------------------

தமிழக சரித்திரத்தில் நிர்ணாயகமான பங்கு வகித்த இரண்டு முன்னாள் முதல்வர்கள் பற்றிய செய்திகள் பரவலாக அறியப்படவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அன்றைய ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் பிரதமராகப் பதவி வகித்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். நேர்மைக்கும், அரசியல் தூய்மைக்கும் இலக்கணமாக விளங்கிய ஓமந்தூராரை, ஒரு துறவி என்றுதான் கூற வேண்டும்.

ஓமந்தூராரின் ஆட்சிக் காலத்தையும், அவருக்கும் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராஜுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையும் பற்றிய சரியான பதிவுகள் இதுவரை இல்லை என்கிற குறையைப் போக்குகிறது பி.ஆர். சுப்பிரமணிய ராஜா எழுதி இருக்கும் "தென்னக காந்தி பி.எஸ். குமாரசாமி ராஜா வாழ்வும் பணியும்' என்கிற புத்தகம்.

1949-ஆம் ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ் கட்சி மூன்றாகப் பிளவுபட்டுக் கிடந்தது. டி. பிரகாசத்தின் தலைமையில் ஆந்திரப் பகுதி உறுப்பினர்கள், காமராஜ் தலைமையில் கணிசமான உறுப்பினர்கள், ஓமந்தூர் ரெட்டியார் போன்ற தூய்மையானவர் ஆட்சியில் தொடர வேண்டும் என்று கருதிய ஒரு பகுதியினரும்தான் அவர்கள். முன்பு டி. பிரகாசத்தைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்ற ஓமந்தூர் ரெட்டியாரின் பெயரைப் பரிந்துரைத்த அதே காமராஜ் இப்போது ரெட்டியாரையும் எதிர்ப்பதால், காங்கிரஸ் மேலிடம் டாக்டர் பட்டாபி சீத்தாராமய்யாவை சென்னைக்கு அனுப்பி சமரசம் மேற்கொள்ளப் பணித்தது.

1949 ஜனவரியில் தொடங்கிய ஓமந்தூராரை அகற்றும் முயற்சியின் ஒவ்வொரு நீக்கங்களையும் பி.ஆர். சுப்பிரமணிய ராஜா ஏதோ டைரிக் குறிப்பு போல தொகுத்து வழங்கி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், அப்போது சென்னை மாகாண சபை உறுப்பினராக இருந்த "தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் 1949-இல் நடந்த ஆட்சி மாற்றத்தின்போது பிளவுபட்டுக் கிடந்த கோஷ்டிகளுக்கு இடையே பாலமாகவும், அரசியல் ராஜ குருவாகவும் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான். "பேனா மன்னன்' டி.எஸ். சொக்கலிங்கத்தின் இதழியல் பணி பற்றியும், அவரது அரசியல் பங்களிப்பு பற்றியும் முறையான, முழுமையான பதிவு எதுவும் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

காமராஜுக்கும் ஓமந்தூர் ரெட்டியாருக்கும் இடையில் மட்டுமல்ல, 1949 மார்ச் 31-ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தலைவர் தேர்தலில் மிக முக்கியமான பங்கு வகித்திருப்பவர்கள் சி. சுப்பிரமணியமும், டி.எஸ். சொக்கலிங்கமும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்தப் புத்தகம். ஓமந்தூரார் பதவி விலக வேண்டும் என்று காமராஜ் பிடிவாதம் பிடித்தபோது, தனக்கு பதிலாகத் தன்னைப் போன்ற தூய்மையாளரான பி.எஸ். குமாரசாமி ராஜா பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக இருந்தால், தான் விலகிக் கொள்கிறேன் என்பதாக இருந்தது ஓமந்தூராரின் பதில். இந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த டி. பிரகாசம், காமராஜின் எண்ணத்தை முறியடித்துத் தனது வேட்பாளரைப் பிரதமராக்குவது என்கிற முயற்சியில் இறங்கினார். தமிழரான டாக்டர் பி. சுப்பராயனை வேட்பாளராக நிறுத்தித் தனது வலிமையை உறுதிசெய்ய முற்பட்டார் அவர்.

ஓமந்தூராரின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட காமராஜ் பி.எஸ். குமாரசாமி ராஜாவைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த ஏற்றுக் கொண்டிருந்தார். ஓமந்தூர் ரெட்டியார், காமராஜ், எம். பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம், டி.எஸ். சொக்கலிங்கம் ஆகியோரின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் குமாரசாமி ராஜா 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுப் பிரதமரானார் என்கிற சரித்திர நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குமாரசாமி ராஜா பிரதமராக பதவி ஏற்பதற்குக் காமராஜுக்கு விதித்த நிபந்தனை என்ன தெரியுமா? அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் தனக்கு எந்தவித நிர்பந்தமும் தரக்கூடாது என்பதும், பிரதமர் பணியைச் செவ்வனே செய்வதற்கு இடையூறாகக் கட்சி நிர்பந்தங்கள் இருக்கக்கூடாது என்பதும்தான்.

தான் பதவி வகித்த மூன்று ஆண்டுகளில் குமாரசாமி ராஜா செய்திருக்கும் சாதனைகள் பல. அவை தம்பட்டம் அடித்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் இன்று வரை, அதன் தாக்கம் சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 60 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களையும் கணக்கெடுத்து, அவசரக் கால நடவடிக்கையில் அவை விளைநிலங்களாக மாற வழிவகுத்திருக்கிறார். அந்த நிலங்களில் பயிர் செய்வோருக்கு இலவச உர விநியோகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் விளைநிலங்கள் அதிகரித்ததற்குக் காரணமே குமாரசாமி ராஜாதான்.

சென்னை மாகாணத்தில் நிர்வாகத் துறையும், நீதித் துறையும் இணைந்து செயல்பட்டு வந்தது. பிரிட்டிஷ் காலனி காலத்திய இந்த நடைமுறையை மாற்றி, நீதித் துறையை சுதந்திரமாக செயல்பட வழிகோலியவரும் குமாரசாமி ராஜாதான். இதை வழியொற்றித்தான் இந்தியாவின் இதர பகுதிகளிலும் நீதித் துறை தனிச் சுதந்திரத்துடன் செயல்படத் தொடங்கியது.

விஜயநகரம், ராமநாதபுரம், சிவகங்கை, வெங்கடகிரி, பொப்பிலி, பித்தாபுரம் போன்ற ஜமீன்களை ஒட்டுமொத்தமாக அரசு ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஈட்டுத்தொகை வழங்கியது குமாரசாமி ராஜாவின் ஆட்சியில்தான். அதேபோல, சமூக நலத் துறையின் ஒரு பகுதியாக மட்டுமே செயல்பட்டு வந்த அரிஜன நலத் துறையைத் தனித் துறையாக்கி, மாவட்ட அளவில் அலுவலகங்கள் ஏற்படுத்தி அரசின் பலன்கள் தாமதமின்றிக் கிடைக்க வழிகோலியதும் அவரது ஆட்சியல்தான் தொடங்கப்பட்டது.

தனது சொல்லிலும் செயலிலும் தூய்மையும் நேர்மையும் கொண்டிருந்த குமாரசாமி ராஜாவின் வாழ்க்கை இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருந்தால், அரசியல் சீரழிவு ஏற்பட்டிருக்காது. என்ன செய்வது? நேர்மையானவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டவர்கள் குமாரசாமி ராஜா போன்ற தியாகிகளை இருட்டடிப்பு செய்து மறக்கடிக்க முயற்சிக்கிறார்களே.

நிறையத் தகவல்கள். அற்புதமான பதிவுகள். நல்லதொரு ஆவணம். ஆனால், பி.ஆர். சுப்பிரமணிய ராஜாவுக்கு எழுத்து அனுபவம் இல்லாததால், புத்தகத்தை சுவையாகவும், கோர்வையாகவும் எழுதத் தெரியவில்லை. டைரிக் குறிப்பு போலத் தொகுத்து வழங்கி இருக்கிறார். தகவல் பெட்டகமாக இருக்கிறதே தவிர, விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் உள்ள வாசிப்புக்கு ஏற்றதாக இல்லை. 1947 முதல் 1952 வரையிலான காலகட்டத் தமிழக அரசியல் பற்றிய சரியான பதிவுகள் இல்லை. இதை அடிப்படையாக வைத்து, மேலும் பல தகவல்களைச் சேர்த்து யாராவது ஒருவர் குமாரசாமி ராஜாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதத்தான் வேண்டும்.

--------------------------------------

இது யார் எழுதிய கவிதை, எப்போது வெளிவந்த கவிதை என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எப்போதோ படித்தது. மனதில் பதிந்தது. இந்த வாரத்திற்கு என்ன கவிதை என்று தேடிச் சலித்த நிலையில், சட்டென்று நினைவலைகளினூடே எட்டிப் பார்த்துச் சிரித்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

விவாகம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம் சரி அப்படியானால் விவாகரத்தும் விதவைக் கோலமும் எங்கே நிச்சயிக்கப்படுகின்றனவாம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.