முகப்பு
தமிழ்நாடு

அரூர் பகுதியில் வழி தவறி வந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி

பொய்யப்பட்டி வனப் பகுதிக்கு யானைகளை இடம் பெயரச் செய்யும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 12 மார்ச் 2013, 12:35 am IST
பகிர்:

பொய்யப்பட்டி வனப் பகுதிக்கு யானைகளை இடம் பெயரச் செய்யும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜவ்வாது மலைப் பகுதியில் இருந்து வழி தவறி வந்ததாகக் கூறப்படும் ஒரு குட்டி யானை உள்பட 6 காட்டு யானைகள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி வனப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சுற்றி வருகின்றன.

 சேர்வராயன் மலைத்தொடர் அ.பள்ளிப்பட்டி காப்புக்காட்டில் கடந்த சனி, ஞாயிறுக்கிழமைகளில் இந்த யானைகள் முகாமிட்டிருந்தன. இவை சாலூர், கோட்டமேடு, எருமியாம்பட்டி வழியாக திங்கள்கிழமை அதிகாலை வாச்சாத்திக்கு இடம் பெயர்ந்தன. வரும் வழியில் விவசாயிகளின் தோட்டங்களில் புகுந்து கரும்புகளைச் சேதப்படுத்தின.

Advertisement

Advertisement

 திங்கள்கிழமை பிற்பகல் வாச்சாத்தி ஆலங்குட்டையில் யானைகள் ஓய்வெடுத்தன. யானைகள் வழக்கமாக இடம் பெயரும் வழித்தடத்தில் சென்றால் அவை வாச்சாத்தி, பே.தாம்பட்டி, கீரைப்பட்டி, வள்ளிமதுரை வழியாக சித்தேரி மலைத்தொடருக்குச் செல்லும் வாய்ப்புள்ளது என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.

 வள்ளிமதுரையில் வரட்டாறு நீர்த்தேக்கம் உள்ளது. அங்குள்ள வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய விளை நிலங்களில் யானைகளுக்கு பிடித்தமான மூங்கில், கரும்பு, வாழை உள்ளிட்டவை உள்ளன. அங்கு யானைகள் சென்றால் அதே பகுதியில் நீண்ட நாள்கள் தங்கிவிடும் சூழ்நிலை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இடம் பெயரச் செய்ய முயற்சி: வனப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் நாள்தோறும் மாலை நேரங்களில் விவசாய நிலப் பகுதிக்கு வருகின்றன. மாவட்ட வன அலுவலர் (அரூர்) கே.ராஜேந்திரன் மேற்பார்வையில், வனவர்கள் கோ.சாக்கப்பன், சி.வேடியப்பன், பெரியண்ணன், வனக் காப்பாளர்கள் எஸ்.மாரப்பன், எம்.மாணிக்கம் ஆகியோர் அடங்கிய வனத் துறை குழுவினர் 25-க்கும் மேற்பட்டோர் யானைகளை இடம் பெயரச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் புகார்: இதனிடையே, யானைகளை வழி நடத்துவற்கான சிறப்புப் பயிற்சி பெற்ற வனத் துறையினர் அரூர் கோட்டத்தில் இல்லை. வனத் துறையினர் யானைகளை விரட்டும் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.