யோகா வழியில் ஆன்மிகப் பாதை...
இந்தியாவின் ஆன்மிக வரலாற்றில், கிழக்கத்திய நாடுகளின் யோகக் கலைகளையும் தத்துவங்களையும் மேற்கத்திய உலகுக்குத் துல்லியமாகக் கொண்டு சேர்த்த பெருமை பரமஹம்ஸ யோகானந்தரையே சாரும்.
இந்தியாவின் ஆன்மிக வரலாற்றில், கிழக்கத்திய நாடுகளின் யோகக் கலைகளையும் தத்துவங்களையும் மேற்கத்திய உலகுக்குத் துல்லியமாகக் கொண்டு சேர்த்த பெருமை பரமஹம்ஸ யோகானந்தரையே சாரும்.
ஆன்மிக விழிப்புணர்வு, குரு-சீடர் பந்தம், அஷ்டாங்க யோகத்தின் அறிவியல் பூர்வமான அணுகுமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் உன்னதமான பயணமாக இவருடைய வாழ்க்கையும் போதனைகளும் அமைந்திருந்தன.
பரமஹம்ஸ யோகானந்தரும் குரு ஸ்ரீ யுக்தேஷ்வரும்
Advertisement
Advertisement
யோகானந்தரின் ஆன்மிகப் பயணத்தின் அடித்தளமாக விளங்கியவர், அவருடைய குருவான சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி. இருவரும் யோகா மூலம் ஆன்மிகப் பாதைக்கு வழிகாட்டியவர்கள்.
மகா அவதார் பாபாஜியின் சீடரான லஹிரி மகாசாயரின் வழிகாட்டுதலில் வளர்ந்த ஸ்ரீ யுக்தேஷ்வர், மிகச்சிறந்த ஞானியாகவும் வானியல் அறிஞராகவும் திகழ்ந்தார்.
யோகானந்தர் தனது குருவை முதன்முதலில் சந்தித்தபோது, அவர்களுக்கிடையேயான ஆன்மிகப் பிணைப்பு உடனடியாக மலர்ந்தது. ஸ்ரீ யுக்தேஷ்வர் மிகவும் கண்டிப்பான, ஆனால் அளவற்ற அன்பைக் கொண்ட குருவாக இருந்தார்.
யோகானந்தரின் மனதில் இருந்த ஆன்மிகச் சந்தேகங்களை அகற்றி, அவரை ஓர் உலகளாவிய ஆன்மிகத் தூதராக வடிவமைத்த பெருமை ஸ்ரீ யுக்தேஷ்வரையே சாரும்.
மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று கிரியா யோகத்தைப் பரப்புவது யோகானந்தரின் கடமை என்பதை உணர்த்தி, அதற்காக அவரை தயார்படுத்தியவர் இவரே.
அஷ்டாங்க யோகம்: பதஞ்சலி முனிவரால் நெறிப்படுத்தப்பட்ட அஷ்டாங்க யோகா என்பது மனிதன் தன் ஆன்மாவை இறைவனுடன் இணைப்பதற்கான எட்டுப் படிகளைக் கொண்ட ஓர் உன்னதப் பாதையாகும். அவை: இயமம் (ஒழுக்கம்), நியமம் (நியதி), ஆசனம் (உடல் நிலை), பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), பிரத்யாகாரம் (புலனடக்கம்), தாரண (ஒருமுகப்படுத்துதல்), தியானம் (ஆழ்ந்த சிந்தனை), சமாதி (இறைநிலை).
பரமஹம்ஸ யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஷ்வர் போதித்த கிரியா யோகம் என்பது இந்த அஷ்டாங்க யோகத்தின் சாராம்சமும், அதன் அதிவேகப் பரிணாம வளர்ச்சியுமாகும். குறிப்பாக, அஷ்டாங்க யோகத்தின் மிக முக்கியப் படிகளான பிராணாயாமம், தியானத்தை அடிப்படையாகக் கொண்டு கிரியா யோகம் செயல்படுகிறது. மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களை (சக்கரங்களை) தூய்மைப்படுத்தி, மனதை மிக விரைவாக அமைதி நிலைக்குக் கொண்டு செல்ல இந்த யோக முறை உதவுகிறது.
இது வெறும் மதக் கோட்பாடு அல்ல, மாறாக மனித மூளையையும் நரம்பு மண்டலத்தையும் ஆன்மிக விழிப்புணர்வுக்குத் தயார்படுத்தும் ஒரு விஞ்ஞானபூர்வமான கலை என்பதை யோகானந்தர் உலகுக்கு நிரூபித்தார்.
கரார் ஆசிரமம்: ஸ்ரீ யுக்தேஷ்வர், யோகானந்தரின் ஆன்மிகப் பணிகளில் கரார் ஆசிரமம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி அவர்களால் 1903 -ஆம் ஆண்டில் ஒடிஸôவின் புரி நகரில் இந்த ஆசிரமம் தோற்றுவிக்கப்பட்டது. கிரியா யோகத்தைப் பரப்புவதற்கும், மாணவர்களுக்கு ஆன்மிகம், ஒழுக்கக் கல்வியை வழங்குவதற்கும் இந்த ஆசிரமம் ஒரு முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
கொல்கத்தா நகருடன் இந்த ஆசிரமத்துக்கும் யோகானந்தருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. யோகானந்தர் தனது இளமைக் காலத்தைக் கழித்ததும், குருவைச் சந்தித்ததும் கொல்கத்தாவில்தான். புரி கரார் ஆசிரமத்தின் கொள்கைகளைப் பின்பற்றி, கொல்கத்தாவிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கிரியா யோகப் பரவலாக்கம் தீவிரமாக நடைபெற்றது.
யோகானந்தர் மேற்கத்திய நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன், கொல்கத்தாவில் இருந்தபடியே பல ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டார். இந்த ஆசிரம மரபுதான் பிற்காலத்தில் யோகானந்தரால் 'யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா' மற்றும் மேற்கில் 'செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்' என உலகளாவிய அமைப்புகளாக விரிவடைந்தது.
பரமஹம்ஸ யோகானந்தரின் புகழ்பெற்ற நூலான 'ஒரு யோகியின் சுயசரிதை' இன்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மனிதர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவதற்குக் காரணம், அதில் உள்ள உண்மைகளும் குரு-சீடர் பந்தத்தின் புனிதமுமே ஆகும்.
ஸ்ரீ யுக்தேஷ்வரின் ஞானமும், கரார் ஆசிரமத்தின் ஆன்மிக அடித்தளமும், அஷ்டாங்க யோகத்தின் அறிவியல் பூர்வமான கிரியா யோகப் பயிற்சியும் இணைந்து, மனிதகுலம் தங்களின் உள்நோக்கிய பயணத்தைத் தொடங்குவதற்கும், உலகளாவிய சகோதரத்துவத்தை அடைவதற்கும் இன்றும் நல்வழிகாட்டி வருகின்றன.
புரி கரார் ஆசிரமமானது, கிரியா யோகா, தியானம், ஆன்மிகப் பயிற்சிக்கான முக்கிய மையம். உலகம் முழுவதிலும் இருந்து யோகா, தியான ஆர்வலர்கள் இங்கு பெரும் அளவில் வருகை தருகிறார்கள். ஸ்ரீ யுக்தேஷ்வர் யோகியின் மகா சமாதி இங்கு அமைந்துள்ளது.
(ஜூன் 21 - உலக யோகா தினம்)