துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட கோரிக்கை
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலைத் திட்டத்தை திட்டமிட்டபடி உரிய காலத்துக்குள் செய்து
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலைத் திட்டத்தை திட்டமிட்டபடி உரிய காலத்துக்குள் செய்து முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். ரூ.1,800 கோடி மதிப்பிலான சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் அந்தப் பணி நிறைவு பெற வேண்டும்.
Advertisement
ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்தத் திட்டப் பணிகளை முடக்கும் வகையில் அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பொதுப் பணித் துறை (நீர் ஆதாரப் பிரிவு) தலைமைப் பொறியாளர் கடந்த ஜனவரி 28-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், திருத்தியமைக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளின்படி இந்த பறக்கும் சாலைத் திட்டத்துக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் புதிதாக ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இந்தத் திட்டப் பணிகளுக்காக கூவம் ஆற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே தேவையான அனைத்து அனுமதிகளையும் வாங்கிய பிறகே திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கிலேயே புதிதாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
தற்போது மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்குச் செல்ல 2 மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பறக்கும் சாலைத் திட்டப் பணி முடிவடைந்தால் வெறும் 15 நிமிஷங்களில் இந்த தூரத்தைக் கடக்க முடியும். இதனால் பொதுமக்களுக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கும்.
ஆகவே, சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு இடையூறு செய்யும் விதத்தில் தமிழக அரசு செயல்படக் கூடாது என்றும், திட்டப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், திட்டமிட்ட காலத்துக்குள் இந்தப் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வில்சன் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை துறைமுக நிர்வாகம் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (மார்ச் 12) ஒத்திவைத்தார்.