முகப்பு
தமிழ்நாடு

ஊரகக் குடியிருப்புகளின் குடிநீர் வசதிக்கு ரூ.1,190 கோடி

தமிழகத்தில் 6 ஆயிரம் ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1,190 கோடி செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என

Updated On : 22 மார்ச் 2013, 4:57 am IST
பகிர்:

தமிழகத்தில் 6 ஆயிரம் ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1,190 கோடி செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2013-14 நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் வெளியான அறிவிப்புகள்: சாலை மேம்பாடு, குடிநீர் வழங்கல் திட்டங்கள், பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை பெருநகர் மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ. 500 கோடியும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்துக்காக ரூ. 750 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை நிதி: குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைகளின் அளவைக் குறைப்பதற்காக கழிவிலிருந்து எரிசக்தி தயாரிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், நிதித் திறன் குறைவாக உள்ள நகராட்சிகள் திடக்கழிவுத் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.100 கோடி சிறப்பு திடக்கழிவு மேலாண்மை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கழிவறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு: கழிவறை வசதிகளை மேம்படுத்தவும், புதிய கழிவறைகள் கட்டவும் இந்த நிதியாண்டில் ரூ.72.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை மேம்பாடு: 281 பேரூராட்சிகளின் சாலைத் தரத்தை மேம்படுத்த ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவிடன் 426 கி.மீ. நீளத்துக்கு பேரூராட்சி சாலைகள் மேம்படுத்தப்படும்.

குடிநீர் வசதி: குடிநீர் வசதியில் பின்தங்கியுள்ள 6,192 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1,190 கோடி செலவில் தேசிய ஊரகக் குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் மாநில நிதியின் கீழ் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

சென்னையில் புதிய நீர்த் தேக்கம்: சென்னையில் குடிநீர் சேமிப்பு அளவை உயர்த்த, கண்ணன்கோட்டை, தேர்வாய்க் கண்டிகை கிராமங்களின் அருகில் ரூ.330 கோடி செலவில் புதிய நீர்த் தேக்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், சோழவரம், போரூர், நேமம், அயனம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவை உயர்த்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.  இப்பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இத்திட்டத்துக்காக, ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், வேலூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக ரூ. 212.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.